மத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு 10 வருடம் சிறை திருமணம் செய்பவர்களுக்கும், செய்து வைப்பவர்களுக்கும் தண்டனை

உத்திரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதமாற்றம் செய்வதற்காக மட்டும் திருமணம் செய்பவர்களுக்கு 10 வருடம் வரை கடுங்காவல் சிறை கிடைக்கும். திருமணம் செய்து வைக்கும் மதத் தலைவர்களும் 5 வருடம் வரை சிறைக்கு செல்ல வேண்டி வரும்.

பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. கர்நாடகா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தை இயற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. உத்திர பிரதேசத்தில் வரும் சட்டசபை கூட்டத்தொடரில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்நிலையில் உத்திரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இது குறித்து மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியது: மத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக கடுமையான சட்டத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதம் மாற்றத்திற்காக மட்டும் திருமணம் செய்பவர்களுக்கு 10 வருடம் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை கிடைக்கும். இதுபோன்ற திருமணங்களை நடத்தி வைக்கும் மதத் தலைவர்களும் 5 வருடம் வரை சிறைக்கு செல்ல வேண்டி வரும். 'எம் பி ஃப்ரீடம் ஆஃப் ரிலீஜியன் பில் 2020' என்ற இந்த மசோதா அமைச்சரவை அங்கீகரித்த பின்னர் டிசம்பர் 28ம் தேதி தொடங்க உள்ள சட்டசபை குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.

இந்த சட்டத்தின்படி திருமணத்திற்கு முன்பு சுய விருப்பத்தின் பேரில் மதம் மாற விரும்புவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பு அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் பெற்றோருக்கு புகார் கொடுக்க வாய்ப்பு ஏற்படும். சட்டபூர்வம் அல்லாத திருமணத்திற்கு தலைமை தாங்கி நடத்துபவர்களுக்கும் தண்டனை கிடைக்கும். இதுபோன்ற திருமணங்களை நடத்தி வைக்கும் அமைப்புகளின் பதிவு ரத்து செய்யப்படும். தண்டனை 10 வருடமாக நிச்சயிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளிகளுக்கு போலீஸ் நிலையத்திலிருந்து ஜாமீன் கிடைக்காது. புகார் இல்லாமலேயே வழக்கு பதிவு செய்ய முடியும். இது ஜாமீன் இல்லாத குற்றமாக கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார். மத மாற்றத்தின் பெயரில் நடைபெறும் குற்றங்கள் குறித்து உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்திய பின்னர் தான் இந்த மசோதா தயார் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் மண்ணில் எந்தக் காரணம் கொண்டும் லவ் ஜிகாத்தை அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

You'r reading மத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு 10 வருடம் சிறை திருமணம் செய்பவர்களுக்கும், செய்து வைப்பவர்களுக்கும் தண்டனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதுச்சேரியை புரட்டி போட்ட நிவர் புயல்.. மரங்கள் விழுந்தன..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்