சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியராக மகாராஷ்டிர ஆசிரியர் தேர்வு

லண்டனைச் சேர்ந்த வர்க்கி டிரஸ்ட் என்ற நிறுவனம் 2014 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை வழங்கி வருது. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த ஆசிரியர்கள் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒருவர் உலக அளவில் சிறந்த ஆசிரியராகத் தேர்வு செய்யப்படுவார். இதுதான் இந்த நிறுவனத்தின் நடைமுறை. ஆசிரியர் பணியில் ஆர்வம், கடின உழைப்பு, மாணவர்களின் திறன் மீதான நம்பிக்கை போன்றவற்றின் அடிப்படையில் இந்த விருதுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருதை, மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம், பரிடிவாடி கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித்சிங் டிசாலே என்ற ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது .

32 வயதான இந்த ஆசிரியர், கியூஆர் ( QR code) குறியீடு முறை மூலம் பாடப்புத்தகத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். பரிடிவாடி கிராம தொடக்கப்பள்ளியில் உள்ளூர் மொழியில் பாடப்புத்தகத்தை உருவாக்கி, மாணவ, மாணவிகளுக்குத் தனி கியூ ஆர் கோடு உருவாக்கி உள்ளார். அதன்மூலம் பாடங்களை, ஒளி, ஒலி வடிவிலும் கதையாகவும் தொகுத்துப் பயிற்றுவித்துள்ளார். இது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டு, மாநிலத்தின் அனைத்து வகுப்புகளுக்கும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில்தான் தேசிய கல்விய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் அனைத்து பாடப்புத்தகங்களிலும் கியூஆர் குறியீடு முறை அறிமுகம் செய்யப்படும் என மத்திய கல்வி அமைச்சகமும் அறிவித்தது.

அத்துடன், பெண் கல்விய ஊக்குவிப்பதற்கும் இந்த ஆசிரியர் சிறந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் அந்த கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு வருகின்றனர். குழந்தைத் திருமணங்களும் இதனால் தடுக்கப் பட்டுள்ளது. இத்தகைய பணிகளைப் பாராட்டி இவருக்குச் சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. , சர்வதேச அளவில் 10 பேர் இறுதி செய்யப்பட்டு அதில் ஒருவராக ரஞ்சித் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு ஒரு மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.4 கோடி ரூபாய் வெகுமதி கிடைத்துள்ளது. இதில் 50 சதவீத தொகையை இறுதி போட்டியாளராகத் தேர்வான 9 பேருடன் சமமாகப் பகிர்ந்து கொள்ளப் போவதாக ரஞ்சித்சிங் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஞ்சித் சிங் கூறுகையில், ஆசிரியப்பணி என்பது பகிர்ந்து கொடுப்பதில்தான் இருக்கிறது. இதனால் பிற இறுதி போட்டியாளர்களின் நாட்டை சேர்ந்த மாணவர்களும் பயன்பெறுவார்கள் எனக் கூறியுள்ளார். அதோடு, பரிசுத்தொகையில் 30 சதவீதத்தை ஆசிரியர்கள் புதுமை படைக்க உதவுவதற்கான நிதியாக உருவாக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியராக மகாராஷ்டிர ஆசிரியர் தேர்வு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 100 கோடிக்கு மேல் பணம் வெளிநாட்டுக்கு கடத்தல் 3 அமைச்சர்கள், நடிகருக்கு சுங்க இலாகா குறி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்