திடீர் மயக்கம், உடல் உதறல் ஆந்திராவில் வேகமாக பரவும் மர்ம நோயால் பீதி

ஆந்திர மாநிலம் எலுருவில் கடந்த சில தினங்களாக சிலர் உடல் உதறலுடன் திடீரென மயக்கம் போட்டு கீழே விழுகின்றனர். குழந்தைகள் உட்பட 228 பேர் இதுவரை பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக பரவும் இந்த மர்ம நோயால் அப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியில் உள்ளது எலுரு நகரம். இப்பகுதியில் கடந்த சில தினங்களாக ஏராளமானோருக்கு ஒரு மர்ம நோய் வேகமாக பரவி வருகிறது. திடீரென மயக்கம் போட்டு கீழே விழுகின்றனர். உடலில் உதறலும் ஏற்படுகிறது. இதுவரை இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 228 பேர் பல்வேறு மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலருக்கு வலிப்பு நோய் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.

இவர்கள் யாருக்குமே ஒருவருக்கொருவர் எந்த தொடர்பும் இல்லாதவர்கள். மேலும் இவர்கள் சமீப காலம் வரை எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவும் இல்லை. வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் தான் இந்த மர்ம நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரே ஒரு குழந்தைக்கு மட்டும் தற்போது உடல்நிலை மோசமாக இருக்கிறது. விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தக் குழந்தைக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மர்ம நோய் வேகமாக பரவியதை தொடர்ந்து உடனடியாக நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு சிறப்பு மருத்துவக் குழு விரைந்து சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகிறது.

ரத்த மாதிரி பரிசோதனை நடத்தியதில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிய வந்துள்ளது. அனைவருக்கும் கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. ஆனால் யாருக்கும் கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், எல்லா முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். அவசர சிகிச்சைக்காக எலுருவில் 150 படுக்கைகளும், விஜயவாடாவில் 50 படுக்கைகளும் தயாராக உள்ளது என்று ஆந்திர மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அல்ல நானி கூறினார்.

You'r reading திடீர் மயக்கம், உடல் உதறல் ஆந்திராவில் வேகமாக பரவும் மர்ம நோயால் பீதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேப்டன்சி டாஸ்கின் குறும்படம்.. ஆரி, ரம்யா சேவ்.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்