மம்தா பானர்ஜியின் வலது கை சுவேந்து அதிகாரி திரிணாமுல் கட்சியிலிருந்து விலகல்... பாஜகவில் சேர திட்டமா?

அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி இன்று அக்கட்சியில் இருந்தும் விலகினார். இவர் மம்தா பானர்ஜியின் வலது கையாகக் கருதப்பட்டவர் ஆவார். கட்சியில் இருந்து விலகிய இவர், பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.என்ன விலை கொடுத்தாவது மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் பாஜக மிகத் தீவிரமாகக் களமிறங்கியுள்ளது.

அடுத்த வருடம் இந்த மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில் தேர்தல் வியூகத்தை பாஜக இப்போதே வகுத்து வருகிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி மேற்பார்வையில் பாஜக தேசிய தலைவர் நட்டா மற்றும் தலைவர்கள் மேற்கு வங்க மாநிலத்திற்கு அடிக்கடி சென்று தங்களது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேர்தல் வியூகம் மட்டுமில்லாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்களை தங்களது கட்சிப் பக்கம் இழுக்கவும் பாஜக திட்டம் தீட்டி வருகிறது.

இந்தத் திட்டத்தின்படி ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சில தலைவர்கள் பாஜக பக்கம் வந்து விட்டனர்.இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜியின் வலது கையாகக் கருதப்படும் சுவேந்து அதிகாரியை தங்கள் பக்கம் கொண்டு வர பாஜக ஒரு அதிரடி திட்டத்தைத் தயாரித்தனர். சுவேந்து அதிகாரி மம்தாவின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் இவர் தன்னுடைய அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அப்போதே அவர் பாஜகவில் சேரலாம் எனப் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இதன் பின்னர் தன்னுடைய எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இந்நிலையில் இன்று அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவர் விரைவில் பாஜகவில் சேருவார் எனக் கூறப்படுகிறது. சுவேந்து அதிகாரி பாஜகவில் சேர்ந்தால் அது மம்தா பானர்ஜிக்கு ஒரு பலத்த அடியாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

You'r reading மம்தா பானர்ஜியின் வலது கை சுவேந்து அதிகாரி திரிணாமுல் கட்சியிலிருந்து விலகல்... பாஜகவில் சேர திட்டமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெஸ்டில் கோஹ்லி டாஸ் வென்றால் தோல்வி கிடையாது... இந்த டெஸ்ட் போட்டியிலும் தொடருமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்