தேர்தலில் வென்றவர்களை வீட்டுச் சிறையில் வைப்பதா? உமர் அப்துல்லா கண்டனம்..

காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர் என்று உமர் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதையொட்டி, வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மொபைல் மற்றும் தொலைப்பேசி, இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.

இதன்பின்னர், பல மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு தலைவராக விடுதலை செய்யப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கூட்டாக ஆலோசித்து, பி.டி.பி, தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் உள்பட 7 கட்சி கூட்டணியை உருவாக்கினர். இதற்கு குப்கர் கூட்டணி என்று பெயரிடப்பட்டது.ஜம்மு காஷ்மீரில் உள்ள 20 மாவட்டங்களிலும் மாவட்ட வளர்ச்சி மன்றக் கவுன்சில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காஷ்மீர் பகுதியில் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி 72 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் பாஜக 3 இடங்களையும் கைப்பற்றின. ஜம்முவில் பாஜக 72 இடங்களையும், தே.மா.கட்சி கூட்டணி 35 இடங்களையும் கைப்பற்றின.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று(டிச.26) பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் திரும்பியுள்ளது. மக்கள் வளர்ச்சிப் பாதையை விரும்புகின்றனர் என்று கூறியிருந்தார்.
ஆனால், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா இதை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், பிரதமர் இன்று ஜனநாயகத்தைப் பற்றி பெருமையாகப் பேசுகிறார். ஆனால், தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளவர்களைக் காஷ்மீர் அரசு துன்புறுத்தத் தொடங்கியுள்ளது. மக்களிடம் அவர்களின் செல்வாக்கை அறிந்து அவர்களை எந்த காரணமும் இல்லாமல் தடுப்புக் காவலில் வைத்திருக்கிறார்கள். சோபியான் மாவட்டத்தில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதுமே எங்கள் தேசிய மாநாட்டுக் கட்சியின் 2 மூத்த தலைவர்களைச் சிறை வைத்துள்ளனர். ஒரு பெண் தலைவரிடம் எங்கள் கட்சியை விட்டு, ஆப்னி கட்சிக்கு மாறி விடுமாறு வற்புறுத்தியிருக்கிறார்கள். இது தொடர்பான போன் உரையாடலை டேப் செய்து வைத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டாலும் இன்னும் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவில்லை.

You'r reading தேர்தலில் வென்றவர்களை வீட்டுச் சிறையில் வைப்பதா? உமர் அப்துல்லா கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள சென்ற 150 ராணுவ வீரர்களுக்கு கொரோனா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்