பிரபல கிரிமினல்கள் முன்னா, சோட்டா ராஜனுக்கு தபால் தலை வெளியீடு.. அதிர்ச்சித் தகவல்..

மும்பை தாதா சோட்டா ராஜன், உ.பி. தாதா முன்னா பஜ்ராங்கி ஆகியோருக்கு தபால் தலை வெளியிட்டு கான்பூர் தபால் அலுவலகம் அதிர்ச்சியூட்டியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இங்குள்ள கான்பூர் நகரத் தலைமை தபால் நிலையம், இரண்டு பிரபல தாதாக்கள் படங்களைப் போட்டு தபால் தலைகளை வெளியிட்டது கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

நாடு முழுவதும் பிரபலமான கிரிமினல்கள் சோட்டா ராஜன், முன்னா பஜ்ராங்கி ஆகியோரின் படங்களை பிரசுரித்துதான் தபால் தலைகள் வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வளவு பெரிய தவறு எப்படி நேர்ந்தது என்று தபால் துறை தலைமை பொது மேலாளர் ஹிமான்சு மிஸ்ராவிடம் கேட்ட போது, மை ஸ்டாம்ப் என்ற பெயரில் தபால் தலை வெளியிடுவதற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தினால் வெளியிடப்படும். இதற்கு அடையாள அட்டைகளைக் காட்டி முறைப்படி விண்ணப்பிக்கலாம். அப்படி விண்ணப்பங்கள் வரும் போது அதிகாரிகள் அவற்றைக் கவனமாகப் பார்த்து அதன்பிறகுதான் வெளியிட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாதது தவறு என்றார்.

கேங் ஸ்டார் என்று சொல்லப்படும் தாதாக்கள் உ.பி.யில் அதிகமாக இருக்கின்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு முன்னா பஜ்ராங்கி என்ற பிரபல தாதா கிழக்கு உ.பி.யில் கோலோச்சி வந்தார். இவர் மீது கிட்டத்தட்ட 40 கொலை வழக்குகள் இருந்தன. கடந்த 2005ம் ஆண்டில் கிருஷ்ணாநந்த் ராய் என்ற எம்.எல்.ஏ.வை கொலை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான இவர், பாக்பத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்குக் கடந்த 2018ம் ஆண்டில் சுனில்ரத்தி என்ற இன்னொரு ரவுடியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதே போல், சோட்டா ராஜன் மும்பையில் பிரபல தாதாவாக இருந்தார். தாவூத் இப்ராகிமின் கோஷ்டியில் இருந்த சோட்டா ராஜன் பிறகு தனியாகப் பிரிந்து தாதாவாக விளங்கி வந்தார். அவர் மீதும் பல வழக்குகள் உள்ளன. வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற அவரை பிடித்து வந்து கைது செய்து, தற்போது திகார் சிறையில் இருக்கிறார்.

You'r reading பிரபல கிரிமினல்கள் முன்னா, சோட்டா ராஜனுக்கு தபால் தலை வெளியீடு.. அதிர்ச்சித் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருநள்ளாறு கோவிலில் ஆன்லைன் முன்பதிவு முறை ரத்து செய்ய முடிவு: முதல்வர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்