விஆர்எஸ் என் தனிப்பட்ட முடிவு: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தகவல்

விருப்ப ஓய்வு என்பது தம்முடைய தனிப்பட்ட முடிவு, இதில் எந்த நெருக்கடியும் இல்லை என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தில் மக்கள் பாதை என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற கிராமிய பொங்கல் விழாவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். இதில் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், உரியடி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சகாயம் கூறியதாவது: தமிழக மக்களின் வாழ்வு மேம்பட ஐஏஎஸ் அதிகாரி என்ற பதவியை ஒரு கருவியாக பயன்படுத்தி என்னால் முடிந்த அளவு நேர்மையாக பணியாற்றியிருக்கிறேன். இனிமேல் என்னால் பணியில் இருந்து மக்களுக்கு நன்மை செய்ய முடியாது என்பதால்தான் விருப்ப ஓய்வு பெற்று வெளியே வந்துள்ளேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவுதான். இதில் எந்த நெருக்கடியும் நிர்ப்பந்தமும் எதுவும் இல்லை.

மக்கள் பாதை அமைப்பு தேர்தலில் போட்டியிடுவது குறித்து இளைஞர்கள் முடிவெடுத்து அறிவிப்பார்கள் . ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தாம் அரசியலுக்கு வந்து முதலமைச்சராக வேண்டும் என்ற கோரிக்கை ஏன் எழுகிறது என புரியவில்லை.ஊழலுக்கு எதிராக நான் நேர்மையாக நின்றதால் ஏராளமான இழப்புக்களை சந்தித்துள்ளேன். ஊழலை தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து களமிறங்கினால்தான் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் சாத்தியமாகும் . அரசு அதிகாரிகள் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் நேர்மையோடும், அறத்தோடும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு சகாயம் தெரிவித்தார்.

You'r reading விஆர்எஸ் என் தனிப்பட்ட முடிவு: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தயங்க வைக்கும் தடுப்பூசி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்