தடுப்பூசி போட்ட சுகாதாரத் துறை ஊழியருக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி

கேரளாவில் முதல் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட சுகாதாரத் துறை ஆய்வாளருக்கு கொரோனா பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நாடு முழுவதும் கடந்த 3 வாரங்களாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாகச் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன் கள பணியாளர்கள் 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போட தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தடுப்பூசி போட்டு 28 நாட்களுக்குப் பின்னர் 2வது கட்ட தடுப்பூசி போடப்படும். நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் இதற்கான முகாம் நடைபெற்று வருகிறது.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன் கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர் 50 வயதிற்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கேரளாவில் முதல் கட்ட தடுப்பூசி போட்ட பின்னர் ஒரு சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா பரவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள வைக்கம் என்ற இடத்தில் உள்ள சுகாதார மையத்தில் இந்த சுகாதார ஆய்வாளர் பணி புரிந்து வருகிறார். கடந்த 19ம் தேதி இவர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இந்நிலையில் நேற்று அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா பரவியது தெரியவந்தது. இரண்டு முறை ஆண்டிஜென் பரிசோதனை நடத்தியும் பாசிட்டிவ் முடிவு வந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்து கோட்டயம் மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் ஜேக்கப் வர்கீஸ் கூறுகையில், இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். தற்போது நோய் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார ஆய்வாளர் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். முதல்கட்ட தடுப்பூசி போட்டு 28 நாட்களுக்குப் பின்னர் மட்டுமே இரண்டாம் கட்ட தடுப்பூசி போட முடியும். இதன் பின்னர் இரண்டு வாரங்கள் கழித்தே நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வரும் என்று கூறினார்.

You'r reading தடுப்பூசி போட்ட சுகாதாரத் துறை ஊழியருக்கு கொரோனா மருத்துவமனையில் அனுமதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொடி பறந்ததுக்கே கதி கலங்குதே.. இன்னும் நிகழப் போவது ஏராளம்.. சசிகலா தரப்பு மிரட்டல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்