மேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா ஆட்சி.. கருத்து கணிப்பில் தகவல்..

மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. வரும் மே மாதம் இம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 2 முறை ஆட்சியில் உள்ள ஆளும் திரிணாமுல் கட்சிக்கு எதிராக மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. அம்மாநிலத்தை முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவீனமாகி குட்டிக் கட்சிகளாக மாறி விட்டன. தற்போது பாஜகவே 2வது பெரிய கட்சியாக கடும் போட்டியில் உள்ளது. திரிணாமுல் கட்சியில் இருந்து அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள் என்று பல தலைவர்களை பாஜக தம் பக்கம் இழுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறது.

இந்நிலையில், சிஎன்எக்ஸ்-ஏபிபி ஆனந்தா சேனல் அம்மாநிலத்தில் கடந்த ஜனவரி 23 முதல் பிப்.7ம் தேதி வரை ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. 112 தொகுதிகளில் 8960 பேரிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது. இதன் முடிவுகளை தற்போது வெளியிட்டிருக்கிறது. அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபைத் தொகுதிகளில் மெஜாரிட்டிக்கு 148 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.கருத்து கணிப்பு முடிவின்படி, திரிணாமுல் 146 முதல் 156 வரை தொகுதிகளில் வென்று 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும். மொத்தம் 42 சதவீத வாக்குகளை அந்த கட்சி பெறும். கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் 44.9 சதவீத வாக்குகளுடன் 211 தொகுதிகளில் வென்ற திரிணாமுல் கட்சி இந்த முறை அந்த பலத்தை இழந்திருக்கிறது.

கடந்த முறை 10.2 சதவீத வாக்குகளுடன் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக இம்முறை 37 சதவீத வாக்குகளை பெறும். 113 முதல் 121 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் 32 சதவீத வாக்குகளுடன் 76 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணி இம்முறை 17 சதவீத வாக்குகளுடன் 20 முதல் 28 தொகுதிகளை மட்டுமே வெல்லும் என்றும் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மற்ற சிறிய கட்சிகள் 3 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

You'r reading மேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா ஆட்சி.. கருத்து கணிப்பில் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழ்நாட்டில் ஜெயலலிதாவைப் போல கேரளாவில் பினராயி விஜயனும் சாதிப்பாரா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்