ஆந்திர நரசிம்மர் கோயிலில் புதிய 40 அடி தேர் பவனி.. ஜெகன் வடம் பிடித்தார்..

ஆந்திராவில் 5 மாதங்களுக்கு முன்பு தீ வைக்கப்பட்ட அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேருக்கு பதிலாகப் புதிதாக 40 அடி உயரத்தில் தேர் கட்டப்பட்டுள்ளது. இதை ஜெகன்மோகன் வடம்பிடித்துத் தொடங்கி வைத்தார்.ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வந்தன. விஜயநகரத்தில் 400 ஆண்டு பழமைவாய்ந்த ராமர்தீர்த்தம் கோயிலிலிருந்த ராமர் சிலை உடைக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன்பாக, விஜயவாடாவில் நேரு பஸ் நிலையம் அருகே சீதா தேவி சிலை உடைந்து காணப்பட்டது. கடந்த செப்.6ம் தேதியன்று அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயிலில் பழமைவாய்ந்த மரத் தேர் தீ வைக்கப்பட்டு எரிந்தது. இந்த சம்பவங்களைக் கண்டித்து பாஜக, தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தினர்.கிறிஸ்து மதத்தைச் சேர்ந்த முதல்வர் ஜெகன்மோகன் கூறுகையில், என்னை இந்து விரோதியாக சித்தரிக்கவே திட்டமிட்டு சில மதவாத சக்திகள் இந்த சதிச் செயல்களுக்குப் பின்னணியில் இயங்குகிறார்கள் என்று குற்றம்சாட்டினார். அத்துடன், அவர் இந்து கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். நசரத்பேட்டையில் 108 பசுக்களைக் கொண்டு கோமாதா பூஜை நடத்தினார்.

இந்நிலையில், அந்தர்வேதி லட்சுமிநரசிம்மர் கோயிலில் புதிதாக 40 அடி உயர மரத் தேர் செய்யப்பட்டுள்ளது. 6 சக்கரங்களைக் கொண்ட இந்த தேரில் இரும்பு கவசம் போட்டு உறுதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதமே இந்த தேர் தயாராகி விட்டாலும், கோயிலின் கல்யாண உற்சவ விழாவில் தேர் பவனியை தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, பிப்.19ம் தேதி, தேரோட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார். மேலும், கோயில் பூஜைகளில் பக்தி பரவசத்துடன் அவர் பங்கேற்றார். ஆயிரக்கணக்கான பக்தர்களும் விழாவில் பங்கேற்றனர்.கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் பாஜக கட்சிக்குச் செல்வாக்கு இல்லை. அதனால் கட்சியை வளர்ப்பதற்குத் தமிழ்நாட்டில் கந்தசஷ்டி கவசம், வேல் போன்றவற்றையும், கேரளாவில் சபரிமலை விவகாரத்தையும், ஆந்திராவில் சிலைகள் உடைப்பு விவகாரத்தையும் பாஜக கையில் எடுத்திருப்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

You'r reading ஆந்திர நரசிம்மர் கோயிலில் புதிய 40 அடி தேர் பவனி.. ஜெகன் வடம் பிடித்தார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தில் 11 மாதங்களுக்குப் பிறகு ஏ.சி. பேருந்துகள் இயங்க அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்