பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரத் தயார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு உண்மையிலேயே மிகப்பெரிய பிரச்சினை தான். எனவே அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு தயார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டி விட்டது. இதனால் சாதாரண மக்கள் மிகவும் பரிதவித்து வருகின்றனர். பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் நாட்டில் காய்கறி உள்பட அனைத்து பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இன்று தொடர்ந்து 13வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மத்திய அரசு விலையைக் குறைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பது போலத் தெரியவில்லை.பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை மத்திய அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரத் தயார் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாட்டில் பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு கடும் பிரச்சனையாக மாறி வருகிறது என்பது உண்மை தான். இவற்றின் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தான் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். பெட்ரோல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஜிஎஸ்டி வரம்புக்குள் இவை கொண்டு வரப்பட்டால் நாடு முழுவதும் ஒரே விலையாக இருக்கும். மத்திய அரசும், மாநில அரசுகளும் வேறுவேறு வரி விதிப்பதைத் தவிர்க்கலாம். இதற்காக மாநிலங்களிடையே ஒரு சுமுக தீர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காகச் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.

You'r reading பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரத் தயார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்கிறது.. கவர்னர் ஆட்சி அமலாகும்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்