ஆட்சியை கவிழ்க்க 5 ஆண்டுகளாக நடந்த சதியை முறியடித்தோம்.. நாராயணசாமி பேச்சு..

புதுச்சேரி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளாக தமது ஆட்சியைக் கலைக்கச் சதி நடந்ததாகக் குற்றம்சாட்டினார்.புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 15, திமுக 4 இடங்களில் வென்று இந்த கூட்டணி மெஜாரிட்டி பெற்றது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. என்.ஆர்.காங்கிரஸ் 7 இடங்களையும், அதிமுக 4 இடங்களையும் கைப்பற்றியிருந்தன. மத்திய அரசு தரப்பில் பாஜகவுக்கு ஆதரவாக 3 எம்.எல்.ஏக்களை நியமித்தது.

இந்நிலையில், அரசுக்கு எதிராகச் செயல்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ தனபால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் காங்கிரசில் இருந்து பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகிய 4 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரஸ்-திமுக கூட்டணி பலம் 14 ஆக குறைந்தது. நியமன எம்.எல்.ஏக்களுடன் சேர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 14 ஆக உள்ளது. இதனால் சட்டசபையில் இருதரப்பிலும் சம பலத்தில் இருந்தனர். இந்நிலையில், நேற்று(பிப்.21) காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் 2 பேர் விலகினர்.

இதையடுத்து, சட்டசபையில் பலம் 26 ஆகக் குறைந்தது. இதில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி பலம் 12 ஆகச் சரிந்தது.இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று(பிப்.22) நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாகப் புதுச்சேரி காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதற்காக மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பல்வேறு முயற்சிகளைச் செய்தார்கள். ஆனால், நமது சட்டமன்ற உறுப்பினர்களின் உறுதியால் அந்த சதிகளை முறியடித்து ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். 5 ஆண்டுகளாக எதுவும் செய்ய முடியாதவர்கள், இப்போது ஆட்சியைக் கலைக்க அஸ்திரங்களை எடுத்துள்ளார்கள்.துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தினாலும் பல்வேறு நலத் திட்டங்களை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம்.

விவசாயிகளுக்கு முதன்முதலாகக் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்திருக்கிறோம். சிறுகுறுநடுத்தர விவசாயிகளுக்கு மின்சார மானியமாக ரூ.25 ஆயிரம் கொடுத்தோம். அது தவிர, நெல்லுக்கு ரூ.10 ஆயிரம் மானியம், கரும்புக்கு ரூ.10 ஆயிரம் என்று கொடுத்திருக்கிறோம். நரேந்திர மோடி அரசு கூட விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் மானியம்தான் கொடுக்கிறது. ஆனால், புதுச்சேரி காங்கிரஸ் அரசு மொத்தம் ரூ.37 ஆயிரம் மானியம் தந்திருக்கிறது. அதே போல், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 9 சதவீதம். மற்ற மாநிலங்களில் இது 5 சதவீதமாக இருக்கிறது. புதுச்சேரியில் இது 1.9 சதவீதம்தான். அதே போல், நரேந்திர மோடி அரசின் வளர்ச்சி விகிதம் மைனஸ் 7 சதவீதம். ஆனால், புதுச்சேரியில் வளர்ச்சி விகிதம் 10.5 சதவீதம். மேலும், மக்களுக்கான திட்டங்களில் 95 சதவீதத்தை நிறைவேற்றி முடித்துள்ளோம்.இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

You'r reading ஆட்சியை கவிழ்க்க 5 ஆண்டுகளாக நடந்த சதியை முறியடித்தோம்.. நாராயணசாமி பேச்சு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம்? வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்