ரயில் சேவை நிறுத்தபடுமா? – என்ன சொல்கிறது ரயில்வே?

நாட்டில் ரயில்சேவை நிறுத்தப்படும் என பல்வேறு தகவல்கள் உலா வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பாக ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வாட்டி வதைக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்படுமா? ரயில்கள் நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெயில்வே வாரியத்தின் தலைவர் சுனீத் சர்மா டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,``ஐ.ஆர்.சி.டி.சி.யின் டிக்கெட் இணைய தளத்தில் கொரோனா கால நெறிமுறைகள் மாநிலங்களால் பின்பற்றப்படுகின்றன. குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்கிறபோது தேவைப்பட்டால் பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொள்ளலாம் அல்லது கொரோனா இல்லை என காட்டும் சான்றிதழ்களை பயணத்தின்போது எடுத்துச்செல்லலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

தற்போது எந்த மாநில அரசும் ரெயில் சேவையை நிறுத்துமாறு கூறவில்லை. இருந்தாலும், கவலை எழுகிறபோது, மாநில அரசுகள் பிரச்சினைகள் குறித்து எங்களோடு விவாதித்துள்ளன. பல்வேறு பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் கொரோனா பரிசோதனைகள் நடத்துகிறார்கள்.

தற்போது ரெயில்வே தினமும் 1,490 மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களையும், 5,397 புறநகர் ரெயில்களையும் இயக்குகிறது. நாடு முழுவதும் மக்கள் கூட்டத்தை சமாளிப்பதற்கு ஏதுவாக 140 கூடுதல் ரயில்களையும் இயக்குகிறது. இந்த மாதமும், அடுத்த மாதமும் 140 ரெயில்கள், 483 சேவைகளை வழங்குகின்றன

இ-டிக்கெட் இணையதளத்தில், பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமா, கொரோனா இல்லை என காட்டும் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டுமா என்பது குறித்த தகவல்கள் பயணிகளுக்கு வழங்கப்படுகின்றன. ரயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கவே பல ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் (பிளாட்பார கட்டணம்) உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 4 ஆயிரம் தனிமைப்படுத்தும் பெட்டிகள் உள்ளன. மகாராஷ்டிராவில் உள்ள நந்துர்பாரில் இருந்து 100-க்கும் அதிகமான பெட்டிகள் கேட்டு கோரிக்கை வந்துள்ளது. 20 தனிமைப்படுத்தும் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

You'r reading ரயில் சேவை நிறுத்தபடுமா? – என்ன சொல்கிறது ரயில்வே? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என் ராசாவின் மனசிலே-2 படம் குறித்து நடிகர் ராஜ்கிரண் அறிக்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்