அவர் ஒரு சுற்றுலா அரசியல்வாதி – ராகுல்காந்தியை சீண்டும் அமித்ஷா!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சுற்றுலா அரசியல்வாதி என அமித்ஷா கிண்டலடித்துள்ளார். மேற்குவங்கத்தில் ராகுல் பிரசாரம் செய்யாமல் சுற்றிக்கொண்டிருப்பதற்கு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் இன்று 5-ம் கட்ட தேர்தல் நடக்கிறது. அங்கு இன்னும் 3 கட்ட வாக்குப்பதிவு மீதமிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் வீரியமிக்க பிரசாரத்தை தொடர்ந்து வருகின்றன. அந்தவகையில் வங்காளதேசத்தை ஒட்டியுள்ள நாடியா மாவட்டத்தின் டெகட்டாவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அமித்ஷா, ``மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் பெரும்பாலும் முடிவடையும் நிலையில் ஒரு சுற்றுலா அரசியல்வாதி வந்திருக்கிறார். அப்படியே நமது டி.என்.ஏ. குறித்தும் கேள்வி எழுப்பி இருக்கிறார். பா.ஜனதாவின் டி.என்.ஏ. வளர்ச்சி, தேசியவாதம் மற்றும் தற்சார்பு இந்தியா ஆகியவைதான். மேற்கு வங்காளத்தில் தலித் மதுவா, நாம்சூத்ரா சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் வசித்து வகிறார்கள்.

சுமார் 70 ஆண்டுகளாக, 3 தலைமுறைகளாக வசித்து வரும் அவர்களுக்கு குடியுரிமையை மம்தா பானர்ஜி மறுத்து வருகிறார்.ஏனெனில் அவரது வாக்கு வங்கி இதை விரும்பாது. ஆனால் மாநிலத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றால், இந்த சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி நிதி உருவாக்கப்படும்.

மேற்கு வங்காளத்தில் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தை அமல்படுத்த பா.ஜனதா விரும்புகிறது. ஆனால் மம்தா பானர்ஜியோ தனது மருமகன் (அபிஷேக் பானர்ஜி) சம்மான் நிதியை விரும்புகிறார்.

ஊடுருவல்காரர்களின் அதிகரிப்பால் நாடியா மாவட்டத்தின் மக்கள் தொகையே மாறிவிட்டது.இப்படிப்பட்ட சட்டவிரோத குடியேறிகள் மட்டுமல்ல, எல்லைக்கு அப்பால் இருந்து ஒரு பறவை கூட இங்கு வருவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading அவர் ஒரு சுற்றுலா அரசியல்வாதி – ராகுல்காந்தியை சீண்டும் அமித்ஷா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேற்குவங்கத்தில் சலசலப்பு இன்றி நடைபெறும் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்