ஒரே ஆம்புலன்ஸில் 22 உடல்கள் - மகாராஷ்டிராவில் நடந்த கொடூரம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் ஏதோ சாக்குமூட்டைகளை ஏற்றுவது போல் ஏற்றும் அதிர்ச்சிகரமான சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசமடைந்து வருகிறது. கொரோனா நோயாளிகளை இஷ்டத்துக்கு எரிப்பது, புதைப்பது என்று கண்ணியமற்ற முறையில் மாநகராட்சிகள், மருத்துவமனைகள் நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றமே எச்சரித்திருந்தது.

ஆனால் அதையும் மீறி மனிதாபாபிமானமற்ற முறையில் இறந்த, உடல்களை ஏதோ பொருட்களைப்போல கையாள்வது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அவுரங்காபாத் மாவட்டம் பீட் நகரில் உள்ள அம்பாஜோகோய் எனும் இடத்தில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த கிராமப்புற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்தன.

மருத்துவக்கல்லூரிக்கு போதுமான ஆம்புலன்ஸ் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன்காரணமாக ஒரே நேரத்தில் 22 உடல்களையும் அடுக்கிவைத்து மருத்துவமனை ஊழியர்கள் தகனம் செய்யும் இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். இந்த அவலமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் மருத்துவர் சிவாஜி சுக்ரே, பேசுகையில், “கொரோனா முதல் அலை வந்த போது 5 ஆம்புலன்ஸ்கள் கொடுக்கப்பட்டன, இப்போது 2 ஆம்புலன்ஸ்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு ஆம்புலன்ஸில் இறந்தவர்களின் உடல்களையும், மற்றொரு ஆம்புலன்ஸில் நோயாளிகளையும் அழைத்துவருகிறோம். இங்கிருந்து உடல்களை அருகே இருக்கும் லோகந்தி ஸ்வர்கான் எனும் கிராமத்தில் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எரியூட்டும் மையத்துக்குக் கொண்டு சென்றோம். உடல்களைப் பாதுகாக்கும் வசதியும் இல்லை. கூடுதலாக 3 ஆம்புலன்ஸ்களை வழங்கக் கோரி கடந்த 17-ம் தேதி மாவட்ட நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினேன். இதுவரை பதில் இல்லை” எனத் தெரிவித்தார். இப்படியாக ஒவ்வொருவரும் தான் அல்லாத பிறரைச் சுட்டிக்காட்டி பொறுப்பை தட்டிக் கழித்து வருகின்றனர்.

You'r reading ஒரே ஆம்புலன்ஸில் 22 உடல்கள் - மகாராஷ்டிராவில் நடந்த கொடூரம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - `எனக்கே என்ட் கார்டா? - விந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்