முல்லைபெரியாறு அணையை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைப்பு

Mullaiperiyaru dam Monitoring Team

முல்லைப் பெரியார் அணையைக் கண்காணிக்க, தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட துணைக்குழுவை அமைக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக முல்லைபெரியார் அணை அனுமதிக்கப்பட்டுள்ள முழு கொள்ளளவான 142அடியை எட்டியது. அப்போது பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்டத்தை 139அடிக்கு தேக்கி வைக்குமாறு கேரள அரசு முறையிட்டது.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தை எட்டியபோது பேரிடர் மேலாண்மைத் துறையின் துணைக்குழு ஒன்றை அமைத்து, அணையில் தேக்கி வைக்க வேண்டிய நீரின் அளவை முடிவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைதொடர்ந்து, தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையானது, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 10பேர் கொண்ட துணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்த துணைக்குழுவானது முல்லை பெரியார் அணையின் நீர்மட்டம், நீர்வரத்து, நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையளவு. அணை திறந்து விடப்படும்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் தலைவராக பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளரும், துணைத் தலைவராக தேனி மாவட்ட ஆட்சியர் இருப்பார்கள் என்றும் உறுப்பினர்களாக தேனி மாவட்டத்தின் வருவாய் அதிகாரி, நீர்வளத்துறை மதுரை மண்டல தலைமை பொறியாளர், நீர்வளத்துறை பெரியார் வைகை வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவல் கண்காணிப்பாளர், தலைமை வனத்துறை அதிகாரி, சுகாதாரத்துறை துணை இயக்குனர், மாவட்ட தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி, ஆகியோர் இருப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக கம்பம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் இருப்பார் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

You'r reading முல்லைபெரியாறு அணையை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜயதசமியன்று அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்