சட்டமன்ற தேர்தல்: ராஜஸ்தான், தெலுங்கானாவில் இன்றுடன் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம் !

Assembly Election campaign over in Telangana, Rajasthan

ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்றுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில், வரும் 7ம் தேதி பலத்த பாதுகாப்புடன் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.
அதன்படி, கடந்த 12 மற்றும் 20ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சத்தீஸ்கர் மாநில தேர்தல் நடத்தப்பட்டது. இதில், 73 சதவீதம் வாக்குகள் பதிவானது. அடுத்தகட்டமாக மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வரும் 7ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக 5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடைபெற்று வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக போட்டி நிலவி வருகின்றன.

இந்நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, குலாம் நபி ஆசாத், கபில் சிபல், சச்சின் பைலடண உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஏற்கனவே சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

ராஜஸ்தானில் ராம்கார்க் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் லட்சுமண் சிங் காலமானதை அடுத்து அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

இதேபோல், தெலுங்கானாவில் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் பிரசாரத்தில் ஈடுபட்டார். இவருடன் பல்வேறு தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு மாநிலங்களிலும் ஒரே நாளில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதன்பிறகு, நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து வரும் 11ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. அன்று மதியம் 2 மணிக்குள் அனைத்து முடிவுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading சட்டமன்ற தேர்தல்: ராஜஸ்தான், தெலுங்கானாவில் இன்றுடன் ஓய்ந்தது தேர்தல் பிரசாரம் ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யூடியூப் மூலம் ஒரே ஆண்டில் 154 கோடி ரூபாய் சம்பாதித்த 7வயது சிறுவன்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்