வேலைக்கு சென்றபடி குழந்தையை கவனிப்பது எப்படி?

Time Management Tips for Working Moms

"எனக்கு என்ன பத்து கையா இருக்கு, நானும் மனுஷிதானே?" - பலமுறை இப்படி சலித்துக் கொள்ளுகிறோம். அலுவலகத்திற்கு வேலைக்கு சென்று வந்து, வீட்டில் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டுமானால் அது எவ்வளவு பெரிய பாரம்!

'இறைவன் தான் எல்லா இடங்களிலும் இருக்கமுடியாதென்றே தாயை படைத்துள்ளான்" என்பது யூத பழமொழி. நடைமுறையில் இந்த காலத்தில் தாயானாவள் எல்லா இடங்களிலும் இருக்கவேண்டியுள்ளது. ஆம், வீட்டில் மனைவியாக, அன்னையாக, மருமகளாக அலுவலகத்தில் பணியாளராக, கண்காணிப்பாளராக, நிர்வாகியாக... இப்படி எல்லா பொறுப்புகளையும் தூக்கிச் சுமப்பது பெண்களுக்கு பெரும் சுமையாக அமைந்து விடுகிறது.

அதிலும் கைக்குழந்தைகள், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள் இருந்துவிட்டால், பிள்ளையின் பக்கமும் அலுவல வேலையின் பக்கமும் மனம் கிடந்து அலைபாயும். உடல் களைப்போடு, மனச்சுமையையும் இப்பொறுப்புகள் கொண்டு வந்துவிடுகின்றன.
தாய்மைக்கும் கடமைக்கும் இடையே பாதுகாப்பாக பயணம் செய்வது எப்படி என்பதற்கு சில குறிப்புகள்

குறித்த சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் வீட்டையோ அலுவலகத்தையோ குறித்து மனதில் வெறுப்பு ஏற்பட்டுவிடாத வண்ணம் மகிழ்ச்சியோடு வாழமுடியும்.
வேலையை நேசியுங்கள்

நீங்கள் வணிக நிறுவனம் நடத்தினாலும், சேவை தொடர்பான பணியில் இருந்தாலும், சுயதொழில் செய்தாலும், ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்தாலும் நீங்கள் செய்யும் வேலையை குறித்து பெருமிதம் கொள்ளுங்கள். வேலை ரசித்து செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அலுவலகத்தின் பணிச்சுமையால் வீட்டில் சலிப்பையோ வெறுப்பையோ காட்டிவிடக்கூடாது. அப்படியே வீட்டில் பிள்ளையை கவனிப்பதால் இருக்கும் மனபாரம், அலுவலக பணியின்போது உடன் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வெளிப்பட்டுவிடக்கூடாது. ஆகவே, அலுவலக கோபம், வருத்தம் ஆகியவற்றை வீட்டுக்கும், வீட்டின் சலிப்பு, சுயபச்சதாபம் ஆகியவற்றை அலுவலகத்துக்கும் எடுத்துச் செல்லக்கூடாது.

தாய்மையை கொண்டாடுங்கள்

சின்ன சின்ன கவலைகள், வருத்தங்கள், தாய்மை என்ற மகத்தான சந்தோஷத்தை பெருமிதத்தை கெடுத்து விட இடங்கொடுக்கவேண்டாம். இன்றைக்கு நாம் குழந்தையை சரியான முறையில் வளர்த்தால், பிற்காலத்தில் அவர்கள் கடமையுணர்வு நிறைந்த, மற்றவர்கள்பால் அக்கறை கொண்ட, வெற்றிகரமான நல்ல குடிமக்களாக வளருவார்கள். அரட்டல் மிரட்டலாக அல்ல; ஒழுக்கத்தை போதிப்பதில் கண்டிப்பான தாயாக இருங்கள்.

சுய அக்கறை தேவை

நீங்கள் நீங்களாகவே இருந்தால் போதும். எல்லோரையும் திருப்திப்படுத்த ஒருவராலும் இயலாது. வேலை, குடும்பப் பொறுப்பு இரண்டையும் சரியானபடி நிறைவேற்றுவது கடினமான காரியம். ஆகவே, உங்களுக்கென்று உங்கள் மனம் மற்றும் உடல் இளைப்பாறுதலடைய போதிய நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கான பொழுதுபோக்கினை கண்டடையுங்கள்; புதிய தோழிகளை ஏற்படுத்துங்கள்; நகைச்சுவைகளை கேளுங்கள்; நகைச்சுவையாக பேச பழகுங்கள். அது மனதுக்கு இதமளிக்கும்.

கவலைப்படாதே, சகோதரி

எந்த ஒரு நாளைக்குறித்தும், இன்றைக்கு அப்படி நடந்துவிட்டது; இப்படி நடந்துவிட்டது என்று கவலைப்படாதீர்கள். நீங்கள் கவலையுறுவதால் உலகம் தன் போக்கை மாற்றிக்கொள்ளப்போவதில்லை. எல்லா நாளும் நல்ல நாளே என்று எடுத்துக்கொள்ளுங்கள். டேக் இட் ஈஸி என்ற பார்முலா தேவையில்லாத வருத்தங்களை அண்டவிடாது.

அவரவருக்கென்ற பொறுப்பு

அலுவலகம், வீடு இரண்டிலும் உங்களுக்கான பொறுப்புகளை சரியானபடி வகுத்துக்கொள்ளுங்கள். தாய்மை என்ற பெரும்பொறுப்பு உங்கள்மேல் இருப்பதால், அலுவலகத்தில் தேவைக்கு அதிகமான வேலைகளை இழுத்துப்போட்டு செய்யாதீர்கள். ஆனால், உங்களுக்கான வேலைகளை மற்றவர்களிடம் தள்ளிவிடாதீர்கள்.
வீட்டிலும் தேநீர் போடுதல், காய்கறிகளை அரிதல், சாப்பாட்டு மேசையை ஒழுங்குபடுத்துதல், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், செல்லப்பிராணிகளை கவனித்தல் என்று வேலைகளை திட்டமிட்டு கணவருக்கு, மூத்த பிள்ளைக்கு, உங்களுக்கு என்று ஒதுக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் சுமையை லகுவாக்கும்.

சமையலறையை ஒழுங்குபடுத்துங்கள்:

வீட்டில் சமையல் வேலை இன்னொரு முக்கியமான பொறுப்பு. இருநூறுக்கும் மேற்பட்ட பொருள்கள் சமையலறைக்குள் இருக்கும். அவசரமான நேரத்தில் ஒவ்வொரு பாத்திரத்தையும், கண்டெய்னரையும் திறந்து பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பருப்பு வகைகள், மணமூட்டிகள், தானியங்கள், மசாலா பொருள்கள் என அனைத்தையும் பார்த்தவுடன் தெரியும் வகையில் டிரான்பரண்ட் கண்டெய்னர்களில் போட்டு மூடி வைத்துக்கொள்ளுங்கள். இது தேவைப்படும்போது உடனடியாக அவற்றை எடுத்துப் பயன்படுத்த உதவும்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்

இன்றைய உலகில் தொழில்நுட்பம் பெருமுன்னேற்றம் அடைந்து வருகிறது. உங்கள் பொருளாதார வசதிக்கேற்ப சலவை இயந்திரம் (வாஷிங் மெஷின்), பாத்திரங்களை கழுவும் இயந்திரம் (டிஷ் வாஷர்), சுத்தம் செய்யும் கருவி (வாக்குவம் கிளீனர்), டோஸ்டர் என்று முக்கியமாக தேவைப்படுபவற்றை திட்டமிட்டு வாங்கலாம். இது உங்கள் வேலையை எளிதாக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த குழந்தை எப்போது வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுங்கள். ஒரு குழந்தை வளர்ந்தபிறகு அடுத்த குழந்தையை பெற்றுக்கொள்வது எல்லா பொறுப்புகளையும் சரியானபடி நிறைவேற்ற வசதியாக இருக்கும்.

You'r reading வேலைக்கு சென்றபடி குழந்தையை கவனிப்பது எப்படி? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மும்மொழித் திட்டம் பெயரில் இந்தியை திணிக்கிறது பா.ஜ.க; ப.சிதம்பரம் ட்விட்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்