காலையில் எழுவது கடினமாக உள்ளதா? சில டிப்ஸ்

Easy ways to become a morning person

காலையில் எழுதல் என்ற யோசனை வந்தாலே,
"காலைல ஆறு மணிக்கு அலாரம் வை"
"எதுக்கு?"
"திரும்பவும் ஆறு அஞ்சுக்கு தூங்கணும்"
என்ற சினிமா காமெடிதான் பலருக்கு நினைவுக்கு வரும்.

காலையில் படுக்கையிலிருந்து எழுந்துவிட வேண்டும் என்று அனைவரும் விரும்பினாலும் பலருக்கு அது இயலாத ஒன்றாகவே போய்விடுகிறது.

"விடியற்காலம்தான் நல்லா தூக்கம் வருது" என்று அநேகர் கூறுவதை கேட்க நேரிடுகிறது. ஆம், அதிகாலை உறக்கம் ஆனந்தமானதுதான். ஆனால், காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் நாள் முழுவதுமே புத்துணர்வோடு இயங்க முடியும். காலை சூரிய ஒளி உடலில்படுவதற்கு வாய்ப்புள்ளோருக்கு உடல் நிறை குறிப்பெண் (உயரத்துக்குள் எடைக்குள் உள்ள விகிதம் BMI) குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கீழ்க்காணும் வழிமுறைகளை கடைப்பிடித்துப் பாருங்கள்; காலையில் எழுவது சாத்தியப்படும்.

அலாரம்: வேறு அறையில்

கட்டிலின் தலைப்பக்கமாக அலாரத்தை வைத்திருந்தால், அது ஒலித்ததும் கண்களை திறக்காமலே தடவி, அழுத்திவிட்டு மறுபடியும் உறங்கிவிடுவதே நம் பழக்கம். என்னதான் உறுதியாக தீர்மானம் எடுத்தாலும் அதிகாலை துயில் அதை மாற்றிவிடும். ஆகவே, உங்கள் படுக்கையறைக்கு வெளியே அல்லது பக்கத்து அறையில் அலாரத்தை வைத்துவிடுங்கள். அது ஒலிக்கும்போது நிறுத்துவதற்காக நீங்கள் படுக்கையறையை விட்டு வெளியே வந்தே தீரவேண்டும். நாளடைவில் காலையில் எழுவது பழகி விடும்.
சிறிது சிறிதாக பழக்கத்தை மாற்றுங்கள்

காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யவேண்டும் என்று தீர்மானிப்பது நல்லவிஷயம்தான். ஆனால், அலாரம் வைத்தும் எழவில்லையென்றால் அது மனதை தளரச்செய்யும். 'நம்மால் முடியாது' என்ற எண்ணம் மனதில் தோன்றுவதற்கு அது வழிவகுத்துவிடும். ஆகவே, எழவேண்டிய நேரத்திற்கு கால் மணி நேரம் (15 நிமிடம்) முன்னதாகவே அலாரம் ஒலிப்பதுபோல வையுங்கள். இதை ஒரு வார காலத்திற்கு கடைப்பிடியுங்கள். பின்னர் பழகி விடும்.

ஆழ்ந்து உறங்குங்கள்

காலையில் எழ வேண்டுமானால், இரவில் நன்றாக உறங்குவது அவசியம். இரவில் ஏழு அல்லது எட்டு மணி நேரம் உறங்கினால் காலையில் எழுவது எளிது. ஆனால், இதை ஒரே நாளில் நடைமுறைப்படுத்தி விட முடியாது. படுக்கையில் படுத்தவாறு உறங்கும் வரைக்கும் ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டு மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் நன்றாக தூங்கலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.

காஃபியா? தேநீரா?

எழுந்ததும் காஃபி அல்லது தேநீர் அருந்துவதை தவிர்ப்பது நல்லது என்றே பல மருத்துவ ஆய்வுகள் பரிந்துரைத்துள்ளன. ஆனால், காலையில் எழுவதுதான் முக்கியம் என்பதால் விதிமுறையை சற்று தளர்த்தி, உங்களுக்கு அதிக விருப்பமானதை பருகலாம். காஃபி, தேநீர் எது உங்களுக்குத் தேவை என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள்

வெளிச்சம் பரவட்டும்

அறை விளக்குகளை அணைத்து, ஜன்னல் திரைகளை இழுத்து மறைத்து வைத்திருந்தால், அதிகாலையில் எழுவது சிரமமாகவே இருக்கும். நம் உடலுக்குள் இயங்கும் கடிகாரம், ஒளியை உணரக்கூடியது. படுக்கும் அறைக்கும் சூரிய வெளிச்சம் வந்தால் உறக்கத்திலிருந்து இயல்பாகவே விழிப்பு வரும். ஆகவே, அதிகாலை சூரிய கதிர்கள் அறைக்குள் வருவதற்கு இடம் கொடுங்கள்.

You'r reading காலையில் எழுவது கடினமாக உள்ளதா? சில டிப்ஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உலகக் கோப்பையில் இடம் கிடைக்கலை; அதிருப்தியில் ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்