இண்டர்வியூவில் இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது?

Smartest way to answer this expected question in Interview

எந்தத் துறையாக இருந்தாலும் நேர்முக தேர்வில், "உங்களைப் பற்றி சொல்லுங்களேன்" (tell us about yourself) என்ற கேள்வி இருக்கக்கூடும். நேர்முக தேர்வு நடத்துபவர் அல்லது குழுவில் ஒருவர், தேர்வை ஆரம்பிப்பதற்காக இந்தக் கேள்வியை கேட்கக்கூடும். இதற்கு நீங்கள் பதில் கூறும் விதத்தைக் கொண்டே அவருக்கு / அவர்களுக்கு உங்கள்மீது ஒரு அபிப்ராயம் உருவாக வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த தருணத்தை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு உதவும் சில குறிப்புகளை கீழே தந்துள்ளோம்.

பணியின் முக்கிய பொறுப்புகள்:

எந்த வேலைக்காக நேர்முக தேர்வு நடத்தப்படுகிறதோ அந்தப் பணியின் முக்கிய பொறுப்புகளை கருத்தில் கொண்டு நீங்கள் பதிலளிப்பது அவசியம். உங்கள் முன்னனுபவம், தற்போது செய்து வரும் பணி ஆகியவை புதிய பணிக்கு எந்தெந்த விதத்தில் உறுதுணையாக இருக்கும் என்பதை விளக்கும் வண்ணம் பதில் கூறுங்கள். இதற்கு நீங்கள் அளிக்கும் பதில் தேர்வை நடத்துபவருக்கு 'பாதி வேலை முடிந்தது' என்ற உணர்வை தருவதாக அமையவேண்டும்.

சாதனைகளை பட்டியலிட தவற வேண்டாம்:

இந்தக் கேள்விக்கான பதிலில் இதுவரை நீங்கள் பணியாற்றிய இடங்களில் என்னென்ன அரிய காரியங்களை சாமர்த்தியமாக முடித்தீர்கள் என்பதையும் சேர்த்தே கூறவேண்டும். சுயதம்பட்டம் போல் அதிகமாக இல்லாமல், அதற்காக எதையுமே கூறாமல் விட்டுவிடாமல், துறையில் உங்களுக்கான அறிவை புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் இருக்கவேண்டும். உங்கள் தலைமைத்துவ பண்பு, எட்டிய இலக்குகள், பிரச்னைகளுக்கு புதிய விதத்தில் கண்டுபிடித்த தீர்வுகள் இவற்றை உள்ளடக்கியதாக பதில் கூறுங்கள்.
சொந்த தகவல் வேண்டாம்:

உங்களைப் பற்றி பேசும்போது கூடிய அளவுக்கு சுருக்கமாக முடித்துக்கொள்ளுங்கள். உங்கள் தனிப்பட்ட சமய நம்பிக்கை, அரசியல் நிலைப்பாடு, குடும்பம் இவற்றைப் பற்றி கூற வேண்டாம். உங்கள் வாழ்க்கை கதை தேர்வு நடத்துபவருக்குத் தேவையில்லை. கூடுமான மட்டும் உங்கள் சொந்த வாழ்க்கை பற்றி ஒரு நிமிடத்துக்குள் சுருக்கமாக மட்டும் விளக்கவும்.

விண்ணப்பத்தில் இருப்பவற்றை தவிர்க்கவும்:

சிலர், விண்ணப்பம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட விவர பட்டியலில் இருப்பவற்றை மறுபடியும் கூறுவர். இதை தவிர்க்கவேண்டும். தேர்வு நடத்துபவர், உங்கள் விண்ணப்பத்தை ஏற்கனவே முழுவதுமாக வாசித்திருப்பார். ஆகவே, அதிலுள்ளவற்றையே திரும்பவும் கூறுவது தேவையற்றது. புதிய பணிக்கு எந்த விதத்தில் நீங்கள் பொருத்தமானவர் என்பதை விளக்கும் வண்ணம் உங்கள் பதில் அமைய வேண்டும்.

கண்டிப்பாக தவிர்க்கவேண்டியவை:

'உங்களைப் பற்றி கூறுங்கள்' என்ற கேள்விக்கு பதில் கூறும்போது, எதிர்பார்க்கும் ஊதியம், ஏனைய எதிர்பார்ப்புகள் குறித்து பேச வேண்டாம். கேள்விக்கு பதில் கூறிவிட்டு, 'எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்' என்றும் முடிக்கக்கூடாது. ஊதியம் போன்றவை குறித்து நிர்வாகம் பிறகு பேசுவதற்கு தீர்மானிருக்கக்கூடும். அதை முதலிலேயே பேசக்கூடாது.

முன்பே பதில் ஆயத்தப்படுத்தவும்:

இந்தக் கேள்விக்கு பதிலை ஆயத்தப்படுத்திக்கொண்டு தேர்வுக்குச் செல்வது நல்லது. அப்போது, நீங்கள் பேசவேண்டியது இன்னது, பேசக்கூடாதது இன்னது என்ற தெளிவு இருக்கும். வார்த்தைகளின் தடுமாற்றம் இருக்காது.
ஆல் த பெஸ்ட்!

You'r reading இண்டர்வியூவில் இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'ராஜ்யசபா ; தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு' இந்திய இறையாண்மையை 'பற்றி' நிற்பேன் - வைகோ உறுதிமொழி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்