மதுரை அருகே விஜயநகர அரசின் சின்னம் கண்டுபிடிப்பு

மதுரை திருமங்கலம் அருகே 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல் மற்றும் விஜயநகர அரசின் சின்னம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், துணைக்கோள் நகரம் அருகிலுள்ள உச்சப்பட்டியில் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல், விஜயநகர அரசின் சின்னம் ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு தனது குழுவினருடன் துணைக்கோள் நகரம் அருகிலுள்ள உச்சப்பட்டியில் சில தினங்களாகக் கள ஆய்வு மேற்கொண்டனர் . இந்த ஆய்வின் போது குதிரைவீரன் நடுகல், விஜயநகர அரசு சின்னம் ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.

2 அடி உயரமும் 1½ அடி அகலமும் கொண்ட ஒரு பலகைக் கல்லில், ஒரு வீரன் குதிரை மேல் அமர்ந்திருப்பது போன்று புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வலது கையில் ஈட்டி ஏந்தியும், இடது கையில் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்தபடியும் அவன் இருக்கிறான். கைகளின் மேல் பகுதியில் காப்பும், கழுத்தில் சிறிய மாலையும், தொடைவரை ஆடையும் அணிந்துள்ளான். தலையில் சிறிய கொண்டை உள்ளது. சிற்பம் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இது போரில் பங்கேற்று வீரமரணமடைந்த குதிரைப்படை வீரனுக்காக வைக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். குதிரையில் அமர்ந்திருப்பதால் கிராம மக்கள் இதை அய்யனார் சுவாமியாகக் கருதி வழிபடுகிறார்கள்.

அதன் அருகில் ஒரே கல்லில், ஒரே அளவில் செதுக்கப்பட்ட சப்தகன்னியரின் புடைப்புச்சிற்பம் உள்ளது. குதிரை வீரன், சப்தகன்னியர் சிற்பங்களை மேடை அமைத்து கிராம மக்கள் வணங்குகிறார்கள்.இதன் கீழ்ப்பகுதியில் தெற்கு நோக்கியுள்ள ஒரு பலகைக் கல்லில் லிங்கம், சூரியன், சந்திரன், சூலம் ஆகியவை கோட்டு உருவமாக வரையப்பட்டுள்ளது.

குதிரை வீரன் சிற்பம் இருக்குமிடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள பாறை மேல் 10 அடி உயரமுள்ள கல் பீடத்துடன் கூடிய தீபத்தூண் ஒன்று உள்ளது. இதை அப்பகுதி மக்கள் பெருமாள் கோயில் என்கிறார்கள். சதுரமாக உள்ள இதன் கீழ்ப்பகுதியில் கை கூப்பிய இருவரும், சூரிய சந்திர சின்னங்களும் உள்ளன. அதன் மேல்பகுதி உருளையாக உள்ளது. பீடத்தில் கி.பி.18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு உள்ளது. இதன் மூலம் ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் உச்சிப்பட்டியிலுள்ள இக்கோயிலில் நேர்த்திக்கடனாகப் பீடம் அமைத்துக் கொடுத்திருப்பதை அறிய முடிகிறது.

இத்தூணில் உடைந்துபோன பழைய கற்கள் கீழே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றில் விஜயநகர அரசின் சின்னமான வராகமும், மற்றொன்றில் வணங்கிய நிலையில் ஒருவரும், சங்கும் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன. மதுரையில் விஜயநகர மன்னர்கள் ஆட்சி உருவான பின்பு, ஆந்திராவிலிருந்து வந்த மக்களின் குடியிருப்பு இவ்வூரில் உருவாகியிருக்கிறது. குதிரைவீரன் நடுகல், விஜயநகர அரசு சின்னமான வராகம் ஆகியவற்றின் அமைப்பைக் கொண்டு, இது கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தாக கொள்ளலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You'r reading மதுரை அருகே விஜயநகர அரசின் சின்னம் கண்டுபிடிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 3 வயது பிஞ்சு குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு மரண தண்டனை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்