ஊழல் தடுப்பு பிரிவிலேயே ஊழல் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில்

மதுரையில் ஊழல் தடுப்பு பிரிவில் பணியாற்றிய ஆய்வாளரே ஊழல் செய்ததால் அவருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது

2010 ஆம் ஆண்டு மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் பெருமாள் பாண்டியன்.மதுரை அரசு மருத்துவர் அசோக்குமார் என்பவர் அரசிடம் உரிய அனுமதி பெறாமல் வீடு வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அவர் மீது மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அவர் மீதான, புகாரில் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க அப்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக இருந்த பெருமாள் பாண்டியன் டாக்டர் அசோக் குமாரிடம் 7 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்டுள்ளார்.

இதன் பேரில் ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் மீது, அப்போதைய திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துணை கண்காணிப்பாளர் இராம.அம்பிகாபதி வழக்குப் பதிவு செய்து பெருமாள் பாண்டியன் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தார்.இவர் மீதான வழக்கு மதுரை ஊழல் வழக்குகளுக்கான தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டது. இன்று இவ்வழக்கில் ஆய்வாளர் பெருமாள் பாண்டியனுக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மதுரை தனி நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

ஊழல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் ஒருவர் ஊழல் தடுப்புப் பிரிவினராலேயே கைது செய்யப் பட்டு சிறைத்தண்டனை பெறுவது தமிழ் நாட்டில் இதுவே முதல் முறை.

You'r reading ஊழல் தடுப்பு பிரிவிலேயே ஊழல் இன்ஸ்பெக்டருக்கு 3 ஆண்டு ஜெயில் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாளை முதல் குற்றால அருவிகளில் நீராட அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்