குரூப்-4 தேர்வு முறைகேடு : ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

2019ஆம் ஆண்டு குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கைப்பற்றிய அனைத்து ஆவணங்களைப் பாதுகாப்பாக வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து தமிழக தலைமைச் செயலர் பதில் அளிக்கவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர் குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வை மாநிலம் முழுவதும் 16 லட்சம் பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் ராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். சிபிஐ விசாரித்தால் தான் உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும். எனவே குரூப் 4 முறைகேட்டில் அனைத்து உண்மைகளையும் கண்டறியவும், சிபிசிஐடி போலீஸார் வசமுள்ள வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குரூப்-4 முறைகேடுகளில் கைதுசெய்யப்பட்டவர்கள் கடைநிலை ஊழியர்கள் மட்டுமே. வழக்கில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் "குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் கைப்பற்றிய ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

You'r reading குரூப்-4 தேர்வு முறைகேடு : ஆவணங்களை பாதுகாப்பாக வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 14ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கு நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்