ஆந்திர மல்லையாக்களை சேர்த்து கொண்ட பா.ஜ.க

Who are the four TDP MPs that joined BJP?

‘ஆந்திர மல்லையாக்கள்’ என்று பா.ஜ.க. விமர்சித்த தெலுங்குதேசம் எம்.பி.க்களை இப்போது அந்த கட்சியே சேர்த்து கொண்டிருப்பது விந்தையாக உள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ், ஜி.மோகன்ராவ், டி.ஜி.வெங்கடேஷ் ஆகியோர் பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தனர். இதைய ராஜ்யசபா தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்யா நாயுடுவும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, ராஜ்யசபாவில் பா.ஜ.க.வின் பலம் 75 ஆக உயர்ந்தது. தெலுங்கு தேசத்தின் பலம் 2 ஆக குறைந்தது.

பா.ஜ.க.வில் சேர்க்கப்பட்ட ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ் ஆகியோரை ஏழெட்டு மாதங்களுக்கு முன்புதான் ‘ஆந்திராவின் மல்லையாக்கள்’ என்று பா.ஜ.க.வே கடுமையாக விமர்சித்து அவர்களை தகுதி நீக்கம் செய்யவும் கோரிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் சவுத்ரியின் கம்பெனிகளில் அமலாக்கப் பிரிவினர் ரெய்டு நடத்தி, அந்த கம்பெனிகள், வங்கிகளில் மோசடி செய்து சுமார் ரூ.5,700 கோடி சுருட்டியுள்ளதாக குற்றம்சாட்டியது. மேலும், அமலாக்கப்பிரிவு அந்த சவுத்ரி எம்.பி.க்கு சம்மன் அனுப்பி விசாரித்தது.

அதேபோல், ரமேஷ் எம்.பி.க்கு தொடர்புடைய கம்பெனியில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். ரூ.100 கோடி வரை அந்த கம்பெனிக்கு முறைகேடாக பணம் வந்துள்ளதை கண்டுபிடித்த வருமானவரித் துறையினர், கணக்கில் வராத இந்த பணம் தொடர்பாக ரமேஷிடம் விசாரித்தனர்.

இதையடுத்து, கடந்த நவம்பர் 26ம் தேதியன்று ஆந்திர பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும், செய்திதொடர்பாளருமான ஜி.வி.எல்.நரசிம்மராவ், ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தெலுங்குதேசம் கட்சியின் ஊழல் முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது. சவுத்ரி, ரமேஷ் போன்ற ஆந்திர மல்்லையாக்களை சந்திரபாபு நாயுடு தனது கட்சியில் வைத்திருக்கிறார்.

இந்த 2 பேரும் முறைகேடாக பணம் சம்பாதித்து வழக்குகளில் சிக்கியிருப்பதால், இவர்களை எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று ராஜ்யசபாவின் மரபுசார் குழுத்(எத்திக்ஸ் கமிட்டி) தலைவரிடம் மனு அளித்துள்ளேன்’’ என்று தெரிவித்திருந்தார்.

ஆந்திராவின் மல்லையாக்கள் என்று சொல்லி, ஏழு மாதங்களுக்கு முன்பு தகுதிநீக்கம் செய்யக் கூறிய அதே எம்.பி.க்களை இப்போது பா.ஜ.க. சேர்த்து கொண்டிருப்பது ஆந்திர அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஜெகன்மோகன் ரெட்டியின் உதவியாளர் எனக் கூறி பல லட்சம் மோசடி..! 4 பேர் கொண்ட கும்பல் சிக்கியது

You'r reading ஆந்திர மல்லையாக்களை சேர்த்து கொண்ட பா.ஜ.க Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காளஹஸ்தியில் செம்மரக்கட்டைகள் கடத்தல்..! ரூ.30 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்