அதிமுக அணியிலும் தொகுதி ஒதுக்குவதில் குழப்பம் - பியூஸ் கோயல் பேச்சு நடத்தியும் தொடரும் இழுபறி

Seat share: Confussion continues in ADMK allies

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில், திமுகவை போலவே, அதிமுக தரப்பிலும் குழப்பம் நீடிக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் விவரம், பின்னர் அறிவிக்கப்படும் என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில், மக்களவைத் தேர்தல் தொகுதி ஒதுக்கீடு, தேர்தல் பிரசார வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், தே.மு.தி.க. துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

சில தொகுதிகளை கேட்டு, கூட்டணி கட்சிகள் வற்புறுத்துவதாகவும், வெற்றி வாய்ப்புள்ள அந்த தொகுதிகளை விட்டுத்தர அதிமுக தயங்குவதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக அமைச்சர் பியூஸ் கோயல் பேச்சு நடத்தியும், சுமூக முடிவு எட்டப்படவில்லை.

முன்னதாக இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்தில் மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளோம். விவசாயிகள், நெசவாளர்கள், சாமானிய மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுக்க, இணைந்து பணியாற்றுவோம் என்றார்.

You'r reading அதிமுக அணியிலும் தொகுதி ஒதுக்குவதில் குழப்பம் - பியூஸ் கோயல் பேச்சு நடத்தியும் தொடரும் இழுபறி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 5 போட்டிகளில் 383 ரன்கள் - வார்னேவுக்கு தக்க பதிலடி கொடுத்த கவாஜா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்