தமிழகத்தில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்!

TN Election Campaign will end today evening

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 18) நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.

கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதுமாக தேர்தல் பரபரப்பு அதிகரித்து இருந்தது. 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி முதல் கட்டமாக நடைபெற்றது. இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைபெறுகிறது.

பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என தேசிய கட்சி தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்து வந்து தேர்தல் பிரசாரங்கள் செய்தனர். உள்ளூர் கட்சிகளும், தேர்தல் பிரசாரங்களில் பிற கட்சிகளை தாக்கிப் பேசி மக்களிடம் வாக்குறுதிகளை அள்ளி வீசி ஓட்டு கேட்டனர். பணப்பட்டுவாடா இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு வெகு ஜோராக நடந்து வருகிறது.

தேர்தல் தேதி நெருங்கி விட்டதால் இன்றுடன் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசாரங்களை முடித்துக் கொள்ள வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் 18ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்க அனைத்து வசதிகளையும் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருவிழாவை முன்னிட்டு, மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளுக்கு நாளை வாக்கு இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளதால், கூடுதல் பாதுகாப்பு அந்த பகுதிகளில் போடப்பட்டுள்ளது.

கடைசி கட்ட பிரசாரம் இன்றுடன் முடிவடைவதால், திமுக தலைவர் ஸ்டாலின் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று பிரசாரம் செய்யவுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலத்தில் இன்று பிரசாரம் செய்கிறார்.

You'r reading தமிழகத்தில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இனி வாய்ப்பில்ல ராஜா.. 7வது தோல்வியை சந்தித்த பெங்களூர் அணி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்