யார் துரோகி, நீங்களா, நானா? டி.டி.வி.க்கு ஓ.பி.எஸ். பதில்!!

who betrays admk party? o.p.s asked t.t.v.dinakaran

தமிழகத்தில் வரும் 18ம் தேதி 39 மக்களவைத் தொகுதி தேர்தலும், 18 சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து மே 18ம் தேதி அரவக்குறிச்சி உள்பட 4 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க., அ.ம.மு.க. கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அனல் பறக்கும் பிரச்சாரம் முடியும் தருவாயில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தினமணி நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

* அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து விட்ட நீங்கள் எல்லோரும் துரோகிகள் என்று டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சிக்கிறாரே?


தன் மீதுள்ள ஊழல் கறையில் இருந்து தப்பிப்பதற்காக ஸ்டாலின், எங்கள் மீது ஊழல் குற்றம் சுமத்துகிறார். அதே போல, தனது துரோகத்தை மறைப்பதற்காக டி.டி.வி. தினகரன் எங்களை துரோகிகள் என்கிறார். உண்மையில் யார் துரோகி?


அ.தி.மு.க., எம்.ஜி.ஆரின் கட்சி. இரட்டை இலை அவரது சின்னம். அவர் மறைந்த போது இந்த கட்சி ஜா, ஜெ என்று பிரிந்தது. அதன்பின், எம்.ஜி.ஆரின் இந்த கட்சியைக் காப்பாற்ற ஜானகி அம்மையாரும், ஜெயலலிதாவும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை துறந்து இணைந்தார்கள். அதற்குப் பிறகு ஜெயலலிதா வலிவூட்டிய இந்த கட்சியை இப்போது அழிக்கத் துடிப்பவர் துரோகியா? கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றும் நாங்கள் துரோகிகளா?

* நீங்களும்தான் இதே ஆட்சிக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினீர்கள்? சட்டசபையில் எதிர்த்து வாக்களித்தீர்களே?
உண்மைதான். ஆனால், எனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லை என்று நான் உணர்ந்ததுமே, கட்சி பிளவுபடக் கூடாது என்பதற்காக இணைந்து விட சம்மதித்தேன். முதலமைச்சராக இருந்த நான் இதற்காக துணை முதல்வராகவும் தயங்கவில்லை. டி.டி.வி. தினகரன், ஜெயலலிதாவில் ஒதுக்கி வைக்கப்பட்டவர் என்பதையும் மறக்கக் கூடாது.

* அ.ம.மு.க.வால் அ.தி.மு.க.வின் வெற்றிவாய்ப்பு பாதிக்குமே?
அ.மு.மு.க. உள்பட எந்த கட்சி வந்தாலும் அ.தி.மு.க.வை பாதிக்காது. எல்லா கட்சியிலும் அதிருப்தியாளர்கள் இருப்பார்கள். அதே போல், அ.தி.மு.க.வில் உள்ள அதிருப்தியாளர்கள் சிலர் தினகரன் கட்சியில் இணைந்துள்ளனர். ஆனால், தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக இல்லை.

இவ்வாறு ஓ.பி.எஸ். பதிலளித்துள்ளார்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை எம்.ஜி.ஆரைப் பற்றி ஓ.பி.எஸ். பேசியதே இல்லை என்பதும், அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆரின் கட்சி என்று சொன்னதே இல்லை என்பதும்தான் அந்த கட்சித் தொண்டர்களின் மைன்ட் வாய்ஸ் ஆக உள்ளது!

You'r reading யார் துரோகி, நீங்களா, நானா? டி.டி.வி.க்கு ஓ.பி.எஸ். பதில்!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனைவி படுகொலை: கொலைக்கார மகனை வலை வீசி தேடும் போலீசார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்