மதுரை தொகுதியில் மறு தேர்தலா..? உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

HC accepts to enquire petition seeking re-election to Madurai Loksabha

மதுரை மக்களவைத் தொகுதியில் மறு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சுயேட்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை, விரைந்து விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பெண் தாசில்தார் ஒருவர் அத்துமீறிய விவகாரம், தற்போது பூதாகாரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது. அப்போது மாவட்ட ஆட்சியருக்கு தெரிந்தே அத்துமீறல் நடந்துள்ளது என்பதையும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்பதையும் தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் நடராஜனை உடனடியாக இடமாறுதல் செய்யவும், உடந்தையாக இருந்த மற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்றமே அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் மதுரை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ண தடை விதிக்க வேண்டும். மறு வாக்குப்பதிவு நடத்த உத்தர விட வேண்டும் எனக் கூறி சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கையும் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சுயேட்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் வழக்கை விரைந்து விசாரிப்பதாகவும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளதால் இந்த வழக்கிலும், அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, மதுரை மக்களவைத் தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்படுமா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

You'r reading மதுரை தொகுதியில் மறு தேர்தலா..? உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதுரை வாக்கு எண்ணிக்கை மைய விவகாரம்; மாவட்ட ஆட்சியர் டிரான்ஸ்பர் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்