ஓட்டு எந்திரங்களில் முறைகேடா? தேர்தல்கமிஷனுக்கு பிரணாப் எச்சரிக்கை!

Pranab Mukherjee Concerned Over Reports Of Alleged EVM Tampering

சிறப்பாக தேர்தல் நடத்தியாக தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு தெரிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் திடீரென தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஓட்டு எந்திரங்களை மாற்ற முயற்சிப்பதாக வந்த தகவல் வேதனை அளிப்பதாகவும், அணு அளவு கூட சந்தேகம் ஏற்படாத அளவுக்கு மக்களின் தீர்ப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதில் பிரணாப் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், முழுக்க, முழுக்க பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட அத்தனை எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.க.வினர் மீதான தேர்தல் புகார்களை தேர்தல் கமிஷன் பொருட்படுத்தவே இல்லை என்றும் குற்றம்சாட்டின. அது மட்டுமல்ல. தேர்தல் ஆணையர் லவோசாவும், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எதிராக திரும்பினார். பிரதமர் மீதான விதிமீறல் புகார்களில் தனது அதிருப்தி கருத்தை பதிவு செய்யவில்லை என்று அவர் அரோராவுக்கு 3 முறை கடிதம் எழுதியது வெளியுலகிற்கு தெரிய வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திடீரென தேர்தல் கமிஷனை ஓஹோவென புகழ்ந்து பேசினார். ‘‘ஜனநாயகம் வெற்றி பெற்று வருகிறது என்றால், அதற்கு சுகுமார்சென் முதல் தற்போதுள்ள தேர்தல் ஆணையர்கள் வரை எல்லோரும் சிறப்பாக தேர்தல்களை நடத்தி வந்ததுதான். இப்போதுள்ள தேர்தல் ஆணையர்களும், தேர்தலை பெர்பெக்ட் ஆக நடத்தி முடித்துள்ளார்கள்’’ என்று பிரணாப் பேசினார். அவர் இப்படி செய்தது திரிணாமுல் கட்சியை வெறுப்பேற்றவா, அல்லது காங்கிரசை வெறுப்பேற்றவா என்ற பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் ஆணையத்தை பிரணாப் பாராட்டிய செய்தி வெளியான 3 மணி நேரத்திற்குள்ளாக அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். அவர் தற்போது வெளியிட்ட அறிக்கையில், ‘‘வாக்காளர்கள் அளித்த வாக்குகளை திருத்தும் முயற்சி நடைபெறுவதாக வெளியான செய்திகள் வருத்தம் அளிக்கிறது. வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். நமது ஜனநாயகத்தின் அடித்தளத்திற்கு சவால் விடுவது போன்று ஒரு அணு அளவு சந்தேகத்தை ஏற்படுத்தும் பேச்சுகளுக்கு வாய்ப்பளிக்கவே கூடாது.

தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் மீது நான் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதேசமயம், அந்த அமைப்புகளில் இருப்பவர்கள் முறையாக செயல்பட வேண்டும் என்றும் கருதுகிறேன்.

எனவே, மக்களின் சந்தேகத்திற்கு இடமளிக்கும் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
இவ்வாறு பிரணாப் கூறியுள்ளார்.

உ.பி. உள்ளிட்ட சில மாநிலங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்து பயன்படுத்தப்படாத ஓட்டு எந்திரங்கள் இடம் மாற்றப்பட்டதால் எதிர்க்கட்சிகளுக்கு பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சூழலில், தேர்தல் கமிஷனை பாராட்டிய பிரணாப், அவசரமாக தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார். 

You'r reading ஓட்டு எந்திரங்களில் முறைகேடா? தேர்தல்கமிஷனுக்கு பிரணாப் எச்சரிக்கை! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸியோமியின் அடுத்த அதிரடி குறைந்த விலைக்கு 48 எம்.பி. கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்