சுஷ்மா ஆளுநரானாரா? பரபரத்த செய்தி.. வாழ்த்து டிவீட் போட்டு ஏமாந்த மத்திய மந்திரி

Confusion over Sushma Swaraj appointed as governor of AP, union minister deleted his tweet:

முன்னாள் மத்திய வெளியுறவு அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ், ஆந்திர மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டதாக நேற்று ஒரு செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தியில் உண்மையில்லை என பின்னர் தெரிய வந்தது. அதிகாரப்பூர்வமற்ற செய்தியை நம்பி சுஷ்மாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பின்னர் அந்தப் பதிவை அவசர அவசரமாக நீக்கிய கூத்து நடந்தேறியுள்ளது.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா ஸ்வராஜ், கடந்த 2014-ல் பிரதமர் மோடி அமைச்சரவையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரானார்.அமைச்சர் பொறுப்பில் திறம்பட செயல்பட்டார் என்ற நற்பெயரும் அவருக்கு உண்டு. பாஜக சார்பில் 9 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றிருந்த சுஷ்மா, உடல் நிலையைக் காரணம் காட்டி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் இம்முறை புதிய அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டார். பாஜக மூத்த தலைவரான சுஷ்மாவுக்கு வேறு ஏதேனும் முக்கியப் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில் ஆந்திர மாநில புதிய ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு பரபரப்பான செய்தி நேற்று மாலை வெளியானது.அதிகாரப்பூர்வமற்ற இந்த செய்தி ஊடகங்களிலும் பரபரப்பு செய்தியானது. இதை நம்பி மத்திய சுகாதார அமைச்சரான ஹர்ஷவர்த்தன், டுவிட்டரில் சுஷ்மாவுக்கு வாழ்த்து கூறிவிட்டார்.

ஆனால் தான் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தியில் உண்மையில்லை. வெளியுறவு அமைச்சர் பொறுப்புகளை ஒப்படைப்பது தொடர்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவைச் சந்தித்தேன். இதை வைத்தே டிவிட்டர் மூலம் என்னை ஆளுநராக்கி விட்டனர் என சுஷ்மா ஸ்வராஜ், அடுத்தடுத்து டுவிட்டரில் 2 பதிவுகளைப் போட்டு தெளிவுபடுத்தியிருந்தார்.

சுஷ்மாவின் டுவிட்டர் பதிவைப் பார்த்து அதிர்ந்து போன மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனோ, அடுத்த சில நிமிடங்களில் தனது டுவிட்டை நீக்கிவிட்டார். ஒரு மத்திய அமைச்சரே அதிகாரப்பூர்வமற்ற செய்தியை நம்பி ஏமாந்த விவகாரம் டெல்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

You'r reading சுஷ்மா ஆளுநரானாரா? பரபரத்த செய்தி.. வாழ்த்து டிவீட் போட்டு ஏமாந்த மத்திய மந்திரி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 12 வருமான வரி கமிஷனர்களை வீட்டுக்கு அனுப்பியது மத்திய அரசு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்