பாஜக எம்.பி வீரேந்திரகுமார் மக்களவை தற்காலிக சபாநாயகராக நியமனம்

BJP mp veerendra Kumar appointed as interim speaker of 17th Loksabha:

17-வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.வீரேந்திரகுமார் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து, வரும் 17-ந் தேதி 17-வது மக்களவையின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம் எடுப்பர். இதற்காக மூத்த எம்.பி.க்களில் ஒருவர் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டு, அவர் எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது வழக்கமான நடைமுறை.

இதன் படி மத்தியப் பிரதேச மாநிலம் திகாம் கார்ஹ் தொகுதி பாஜக எம்.பி. வீரேந்திரகுமார் தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 7-வது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரேந்திரகுமார், கடந்த முறை மோடி அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இவர் 17-ந் தேதி கூடும் மக்களவைக் கூட்டத்தில் புதிய எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அத்துடன் 19-ந் தேதி நடைபெறும் சபாநாயகர் தேர்தலையும் முன்னின்று நடத்தி வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.பி.க்கள் பதவிப் பிரமாணம், சபாநாயகர் தேர்வு முடிவடைந்தவுடன் 20-ந் தேதி காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார். ஜுலை 26-ந்தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜூன் 5-ந் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீத்தாராமன் தமது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பாஜக எம்.பி வீரேந்திரகுமார் மக்களவை தற்காலிக சபாநாயகராக நியமனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி..! அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கும் திமுக இளசுகள்..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்