சட்டரீதியான நடவடிக்கை ஊடகங்களுக்கு அதிமுக எச்சரிக்கை

Admk warns media not to allow anybody in political depates as admk supporters

அ.தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர்களைத் தவிர வேறு யாரையாவது அ.தி.மு.க. ஆதரவாளர்கள் என்ற பெயரில் கருத்து சொல்ல அனுமதித்தால், அந்த தொலைக்காட்சி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சி திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியில் உச்சக்கட்ட குழப்பம் நிலவுகிறது. ஓ.பி.எஸ், எடப்பாடி ஆகியோர் இரட்டைத் தலைமையாக இருப்பதால் எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்கப்படுவதில்லை என்றும், அதுவும் கட்சி தோற்றதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் மதுரை வடக்கு எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா வெளிப்படையாக பேட்டி அளித்தார்.

அதை ஆமோதிக்கும் வகையில், மற்றொரு எம்.எல்.ஏ. குன்னம் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார். அவர் ஒரு படி மேலே போய், ஓ.பி.எஸ். தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்குவதற்காக கட்சியை வளைக்கிறார் என்று மறைமுகமாக குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், அ.தி.மு.க.வின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் ஜூன் 12ம் தேதி நடைபெற்றது. அதில், ராஜன் செல்லப்பா உள்பட குறை கூறுபவர்கள் யாருமே பேச அனுமதிக்கப்படவில்லை. அவைத் தலைவர் மதுசூதனன், ஓ.பி.எஸ், எடப்பாடி, முனுசாமி ஆகிய நான்கு பேர் பேசினார்கள். அவர்களும் தற்போது சட்டசபை தொடங்கவிருப்பதால், எம்.எல்.ஏ.க்களுக்குள் சண்டை ஏற்பட்டால், ஆட்சி கவிழ்ந்து விடும். அது நமக்குத்தான் இழப்பு என்று எச்சரித்து விட்டு கூட்டத்தை முடித்தார்கள்.

கட்சிக்குள் விவாதிக்காமலேயே பூசி மெழுகி விட்டதால், மீண்டும் வெளியில் யாராவது பேசி விடுவார்களோ என்ற பயத்தில் ஒற்றைத் தலைமை உள்பட எந்த விஷயத்தையும் யாரும் பேசக் கூடாது என்று உத்தரவு போட்டனர். அது மட்டுமின்றி, கட்சியால் நியமிக்கப்பட்ட செய்தி தொடர்பாளர்களுக்கும் வாய்ப்பூட்டு போட்டு, தலைமைக் கழகம் அறிக்கை வெளியிட்டது.

இதனால், தொலைக்காட்சி விவாதங்களில் அ.தி.மு.க. பற்றிய விவாதங்களுக்கு அவர்களின் தரப்பு கருத்துக்களை கேட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் தோல்விக்கு பின் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகுமா அல்லது தொடர்ந்து மத்திய அரசுக்கு ஜால்ரா போட்டு 2 ஆண்டு ஆட்சியை தக்க வைக்குமா? அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் மக்களின் விவாதமாக உள்ளது. எனவே, தொலைக்காட்சிகள் அந்த விவாதத்தையே தொடர்ந்து நடத்தி வருகின்றன. விவாதத்திற்கு அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர்கள் வராத நிலையில், தனியரசு எம்.எல்.ஏ. உள்பட அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சியினரை அமர வைக்கின்றனர்.

இப்படி அ.தி.மு.க. ஆதரவாளர்களாக வருபவர்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஒற்றைத் தலைமை அவசியமா, இல்லையா என்று கருத்து சொல்கிறார்கள். இதனாலும் ஓபிஎஸ், எடப்பாடி அணிகளுக்கு இடையே பிரச்னை வந்து விடுமோ என்று அதிமுக தற்ேபாது அஞ்சுகிறது.

இந்த அதீ்த பயம் காரணமாக, ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அ.தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பில் அறிக்கை வெளிடப்பட்டுள்ளது. அதில், ‘‘அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களைத் தவிர மற்ற யாரையும் எங்கள் ஆதரவாளராக சித்தரித்து கருத்து கேட்கக் கூடாது. அப்படி கேட்கும்பட்சத்தில் அதற்கு அ.தி.மு.க. பொறுப்பேற்காது. மேலும், இது சம்பந்தமாக சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறோம்’’ என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

You'r reading சட்டரீதியான நடவடிக்கை ஊடகங்களுக்கு அதிமுக எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சரியான நேரத்துக்கு ஆபீஸ் வாங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்