எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை- கர்நாடக சபாநாயகர் கை விரிப்பு

Karnataka political crisis, assembly speaker says not received any resignation letter from rebel MLAs:

அதிருப்தி எம்எல்ஏக்கள் யாரிடம் இருந்தும் ராஜினாமா கடிதம் தமக்கு வரவில்லை என்றும், தம்மிடம் முறையான முன் அனுமதி பெற்று தனித்தனியே கடிதம் கொடுத்தால், சட்டப்படி பரிசீலிப்பேன் என்று அதிரடியாகக் கூறி கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கர்நாடகத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்- மஜத கூட்டணி அரசின் கடந்த ஓராண்டு கால ஆட்சியில் குழப்பம் மேல் குழப்பம் தான். இப்போது அந்தக் குழப்பம் உச்சக்கட்டத்தை எட்டி விட்டது. கடந்த 4 நாட்களில் கர்நாடக அரசியலில் நிமிடத்துக்கு நிமிடம் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு, இப்போது க்ளைமாக்ஸ் கட்டத்தை எட்டிவிட்டது.

முதலில் காங்கிரஸ் மற்றும் மஜதவின் 13 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்து விட்டு பத்திரமாக மும்பையில் பதுங்கி விட்டனர். அடுத்தபடியாக அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேட்சைகள் நாகேஷ், சங்கர் ஆகிய 2 பேரும் ஆதரவு வாபஸ் என்று அறிவித்து அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்து விட்டனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் தான் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? தப்பிப் பிழைக்குமா? என்பதற்கு இன்று சபாநாயகர் ரமேஷ்குமார் எடுக்கவுள்ள அதிரடி முடிவு மூலம் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.கடந்த ஒரு வாரமாக தனது அலுவலகத்திற்கு வராமல் இருந்த சபாநாயகர் ரமேஷ்குமார் இன்று தமது வழக்கமான அலுவல்களை கவனித்தார். அப்போது எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் குறித்து கருத்து தெரிவித்த சபாநாயகர், எம்எல்ஏக்கள் யாரிடம் இருந்தும் தமக்கு கடிதம் வரவில்லை என்று தடாலடியாகத் தெரிவித்தார்.

மேலும் முன்கூட்டியே முன் அனுமதி பெற்று தம்மிடம் தனித்தனியாக வந்து ராஜினாமா கடிதம் கொடுத்தால் மட்டுமே பரிசீலிப்பேன் என்றார். தாம் அரசியல் சட்டப்படியே செயல்படுவதாகவும், தம்மீது அரசியல் சாயம் பூசுவதை ஏற்க முடியாது என்ற ரமேஷ்குமார், சபாநாயகராக பொறுப்பேற்றவுடனே, காங்கிரஸ் கட்சிக்கும் தமக்குமான உறவு ஏதுமில்லை என்றார். தாம் மக்கள் நலனுக்காகவும், கடவுளுக்குப் பயந்து மட்டுமே செயல்படுவேன் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் மஜத அதிருப்தி எம்எல்ஏக்கள், கடந்த வாரம் சபாநாயகரிடம் முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுக்கவில்லை. சபாநாயகர் வருகைக்காக பல மணி நேரம் காத்திருந்து பார்த்தனர். சபாநாயகர் வராததால் அவருடைய செயலாளரிடம் கொடுத்து விட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராஜினாமாவை அவர் ஏற்பாரா? மாட்டாரா? என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தற்போது தமக்கு யாரிடம் இருந்தும் கடிதம் வரவில்லை என சபாநாயகர் கூறியிருப்பது கர்நாடக அரசியலில் மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது எனலாம்.

You'r reading எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் எதுவும் வரவில்லை- கர்நாடக சபாநாயகர் கை விரிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வைகோ வேட்புமனு ஏற்பு எம்.பி.யாவது உறுதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்