கோவாவில் நடந்தது அரசியல் விபச்சாரம்: காங்கிரஸ் காட்டம்

Congress MLA likens Goa crisis to political prostitution

கோவாவில் இப்போது நடப்பது அரசியல் விபச்சாரம், இதைப் பற்றி நாம் பேசவே கூடாது என்று காங்கிரஸ் எம்எல்ஏ ரெஜினால்டோ கூறியுள்ளார்.

கோவாவில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருடைய அமைச்சரவையில் கோவா பார்வர்ட் கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய் துணை முதல்வராக இருந்தார். அந்த கட்சியின் மேலும் 2 எம்எல்ஏக்களும் அமைச்சர்களாக இருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, எதிர்க்கட்சித் தலைவராகவும், காங்கிரஸ் எம்எல்ஏவாகவும் இருந்த சந்திரகாந்த் கவ்லேகர் தலைமையில் அக்கட்சியின் 10 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்து விட்டனர். இதனால் பாஜக 27 எம்எல்ஏக்களுடன் மெஜாரிட்டி பலம் பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து, கோவா பார்வர்ட் கட்சியை கழட்டி விட பாஜக தீர்மானித்தது. அதன்படி, துணை முதல்வர் விஜய்சர்தேசாய் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த வினோதா பலிங்கர், ஜெயஷே் சலோகர் ஆகியோரையும், சுயேச்சை உறுப்பினர் ரோகன் கவுந்தேவையும் அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் பிரமோத் சாவந்த் அதிரடியாக நீக்கி விட்டார்.

தற்போது இவர்களுக்கு பதிலாக, இதுவரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து காங்கிரசில் இருந்து கட்சி தாவி வந்த சந்திரகாந்த் கவ்லேகர், அட்டானாசியோ பாபுஷ், பிலிப் நேரி ரோட்ரிக்ஸ் ஆகியோரையும், துணை சபாநாயகர் மைக்கேல் லோபோவையும் புதிய அமைச்சர்களாக சாவந்த் நியமித்துள்ளார். இந்த புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா, இன்று மாலை 3 மணியளவில் கோவா கவர்னர் மாளிகையில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, காங்கிரசை விட்டு விலகாத எம்எல்ஏ ரெஜினால்டோ, துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட கோவா பார்வர்ட் கட்சித் தலைவர் விஜய்சர்தேசாயை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘அரசியலில் இன்பம், துன்பத்திற்கு எதுவும் இல்லை. காங்கிரஸ் வழக்கமான பணிகளை மேற்கொள்கிறது. கோவாவில் இப்போது நடந்திருப்பது அரசியல் விபச்சாரம். இதைப் பற்றி பேசுவதே அசிங்கம்’’ என்று காட்டமாகக் கூறினார்.

தற்போது கோவா பார்வர்ட் கட்சியின் 3 எம்எல்ஏக்களும், சட்டசபையில் காங்கிரசின் 5 எம்எல்ஏக்களுடன் சேர்ந்து எதிர்க்கட்சி கூட்டணியாக செயல்படுவார்கள் எனத் தெரிகிறது.

கர்நாடக விவகாரம் : பாஜகவுக்கு எதிராக சோனியா காந்தி ஆர்ப்பாட்டம்

You'r reading கோவாவில் நடந்தது அரசியல் விபச்சாரம்: காங்கிரஸ் காட்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கட்சி தாவி வந்தவர்களை அமைச்சராக்கும் முதல்வர்; கோவா பாஜகவின் உபசரிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்