ஜம்முவில் மொபைல், இன்டர்நெட் மீண்டும் செயல்படத் தொடங்கியது

Communication blackout in Jammu region ends, 2G mobile internet services restored in 5 districts

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் 5 மாவட்டங்களில் இன்று முதல் 2ஜி மொபைல் மற்றும் இணையதள சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதாக்கள், தீர்மானங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டன.

இந்த நடவடிக்கைகளால், காஷ்மீரில் எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் ஏற்படலாம் என்று கருதி, முன்கூட்டியே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். மேலும், ஸ்ரீநகர் உள்பட 22 மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட பல கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

கடந்த 5ம் தேதி முதல் இணையதள, மொபைல் மற்றும் தொலைபேசி சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதனால், காஷ்மீரில் முழு அமைதி நிலவி வருகிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரிலேயே முகாமிட்டு பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிட்டார்.

இதற்கிடையே, காஷ்மிரீல் மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக கூறி, அவற்றை விலக்கக் கோரி காஷ்மீர் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணையின்போது, காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் அங்கு நிலைமை சீரடைந்து வருகிறது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல் கட்டமாக ஜம்மு மண்டலத்தில் 5 மாவட்டங்களில் 2ஜி மொபைல் சேவை மற்றும் இணையதள வசதிகள் இன்று முதல் செயல்படத் தொடங்கியது. ஜம்மு, ரியாசி, சம்பா, தத்து, உதம்பூர் மாவட்டங்களில் தற்போது தகவல் தொடர்பு சேவைகள் உள்ளதால், மக்கள் மீண்டும் மாமூல் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். அடுத்த கட்டமாக, மாற்ற மாவட்டங்களிலும் ஓரிரு நாட்களி்ல் தகவல் தொடர்பு சேவைகள் செயல்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் கட்டுப்பாடுகளை நீக்க சில நாட்கள் அவகாசம் தேவை; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கோரிக்கை

You'r reading ஜம்முவில் மொபைல், இன்டர்நெட் மீண்டும் செயல்படத் தொடங்கியது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - காஷ்மீர் விவகாரத்தில் பாக்., சீனாவுக்கு மூக்குடைப்பு ; ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கைவிரித்தது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்