முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம்

I have never misrepresented Muslims, Rajendrabalaji explained

முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை என்றும், தேர்தலுக்காக தன்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் களக்காடு அருகே கேசவநேரி என்ற கிராமத்தில் ரேஷன் கடை அமைக்கக் கோரி, இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் முஸ்லிம் ஜமாத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்துள்ளனர். ஆனால், அவர்களிடம் இருந்து மனுவை வாங்காத அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நீங்கள்(முஸ்லிம்கள்)தான் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீர்களே, பிறகு எதற்கு மனு ெகாடுக்கிறீர்கள்? 6 சதவீத வாக்குகளை வைத்து கொண்டு நீங்கள் என்ன செய்ய முடியும்? காஷ்மீரை போல உங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று பதிலளித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நி்லையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதாவது:

கடந்த 16-ம் தேதி இரவு நாங்குநேரி தொகுதியில் நான் தங்கியிருந்த வீட்டில் இருந்து வெளியே கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது 3 பேர் வந்து ரேஷன் கடையை பிரித்து தர வேண்டும் என என்னிடம் கேட்டனர். அதற்கு நீங்கள் தாசில்தாரிடம் மனு கொடுங்கள். அதன் நகலை என்னிடம் கொடுங்கள் என்று பதில் சொன்னேன். ஆனால், அவர்கள் ரேஷன்கடையை பிரித்து தர முடியுமா, முடியாதா என்பதை இப்போதே சொல்லுங்கள் என்றனர். அவர்கள் பேச்சு சரியில்லாததால் நாளைக்கு வாருங்கள் எனக் கூறி அனுப்பி வைத்தேன்.

ஆனால் நான் இஸ்லாமிய சமுதாயத்தை தவறாக பேசியதாக பொய்யான தகவலை பரப்பியுள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல். இது தொடர்பாக காதர் முகைதீன், ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி போன்றவர்கள், உண்மை தெரியாமல் என்னை கண்டித்து அறிக்கை விட்டுள்ளனர்.

சிறுபான்மையினரது ஓட்டுகள் அதிமுக பக்கம் திரும்பியிருப்பதால், அந்த ஓட்டுக்களை திமுக பக்கம் திருப்பவே என்னை பற்றி இந்த பொய் தகவல்களைப் பரப்பியுள்ளனர். இதனை இஸ்லாமிய மக்கள் நம்பத் தயாராக இல்லை” என்றார்.

You'r reading முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முஸ்லிம்களை இழிவுபடுத்திய ராஜேந்திர பாலாஜியை நீக்க பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தல்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்