தேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டை ரத்து செய்து இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய கோரி வழக்கு

தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வாக்குகளைத் தபால் வாக்குகளாக அல்லாமல், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவு செய்யக் கோரி வழக்கில் இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தம பாளையத்தைச் சேர்ந்த பாண்டித்துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொது நல வழக்கினைத் தொடர்ந்திருந்தார். அதில், "100 சதவிகித வாக்குப்பதிவிற்காகத் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் அன்று தேர்தல் பணிகளில் இருக்கும் அரசு ஊழியர்கள் தங்களது வாக்குகளைத் தபால் மூலமாகச் செலுத்தும் முறையே நடைமுறையில் உள்ளது. தபால் வாக்கைப் பெற எண்ணற்ற வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லா விண்ணப்பங்களும் தொலைந்து விடாமல் அனுப்புவது மிகக் கடினமான ஒன்று. பல நேரங்களில் தபால் வாக்குகளே வெற்றிவாய்ப்பைத் தீர்மானிக்கின்றன.

அதனால்தான் தபால் வாக்குகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.இதனால் 100 சதவீத வாக்குப்பதிவு நடைமுறையில் தொய்வு ஏற்படுகிறது. ஆகவே தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வாக்குகளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இது தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழக தலைமைச் செயலர், தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

You'r reading தேர்தல் பணியாற்றும் ஊழியர்களுக்கு தபால் ஓட்டை ரத்து செய்து இயந்திரங்கள் மூலம் பதிவு செய்ய கோரி வழக்கு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுகவில் சசிகலாவை மீண்டும் சேர்க்கவே முடியாது.. முதலமைச்சர் திட்டவட்டம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்