சசிகலா மீண்டும் சேரலாம்: ஓபிஎஸ்... அதிமுகவில் என்ன நடக்கிறது?

கட்சியின் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டால் சசிகலா கட்சியில் மீண்டும் சேருவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கும்போது இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சில சந்தேகங்கள் சசிகலா மீது இருந்தன. அந்த சந்தேகங்களை அவர் தெளிவுபடுத்தினால் அவர் கட்சியில் சேருவதில் எந்த பிரச்னையும் இல்லை. தனிப்பட்ட முறையில் அவரோடு எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேர்தல் பரப்புரையில் சசிகலாவையும் தினகரனையும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி வரும் வேளையில் பன்னீர்செல்வம் இப்படி கூறியுள்ளது வியப்பை அளிக்கிறது. தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவளித்து வரும் தேவர் சமுதாயத்தினர், சசிகலாவுடன் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையால் அதிமுகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றும், அவர்களது ஆதரவு ஒட்டுமொத்தமாக இல்லாமற்போனால் தென் மாவட்டங்களில் கட்சி பெருத்த பின்னடைவை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது. ஓபிஎஸ், சசிகலா இருவருமே தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், பன்னீர்செல்வம் தன் நிலைப்பாட்டை சசிகலா மற்றும் தினகரனுக்கு இதன் மூலம் தெரியப்படுத்தியுள்ளார் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

பன்னீர்செல்வம் இம்முறையும் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு தேவர் சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கின்றனர். ஆண்டிப்பட்டி தொகுதியின் முன்னார் எம்.எல்.ஏவான தங்க தமிழ்ச்செல்வன், பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடுகிறார்.

You'r reading சசிகலா மீண்டும் சேரலாம்: ஓபிஎஸ்... அதிமுகவில் என்ன நடக்கிறது? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தவானின் மிரட்டலிலும் கிருஷ்ணாவின் கலக்கலிலும் ஜெயித்த இந்தியா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்