மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கமீலா நாசர் ஒதுங்கியதற்கு இதான் காரணமா…!

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியது முதல் அவருடன் இணைந்து பணியாற்றியவர்களுள் கமீலா நாசரும் ஒருவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை மத்திய தொகுதியில் போட்டியிட்ட கமீலா நாசர் கிட்டத்தட்ட 11 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருந்தார்.

தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம், மதுரவாயில் தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்த நிலையில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனையடுத்து அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளராக இருந்த கமீலா நாசர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

“என்னுடைய மகனைக் கவனித்துகொள்ள வேண்டிய சூழலில் நான் இருக்கிறேன். குடும்பம், அரசியல் என ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்வது கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதனால் தான் ராஜினாமா செய்தேன். குடும்பச் சிக்கல்கள் சரியானதும், இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் மீண்டும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறது” என கமீலா நாசர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கியது முதல் பணியாற்றிய இவர் திடீரென கட்சியில் இருந்து விலகியதற்கு பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் உண்டான விரக்தி என்றும், மற்றொரு காரணமாக, 2015 ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில், நாசர் - விஷால் அணியினரை மிக கடுமையாக விமர்சித்த சரத்குமாரை மக்கள் நீதி மய்ய கூட்டணியில் இணைத்ததால் கமீலா நாசர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில், கமல் பிரசாரம் செய்ய வரும்போது, 50-க்கும் மேற்பட்ட சிறார்களுடன், கட்சி கொடியுடன் ஊர்வலமாக கமீலா சென்றதும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் கமீலா நாசர் மீது கட்சி தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதால், தாங்களாகவே ராஜினாமா செய்யும்படி கமல்ஹாசனே அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

You'r reading மக்கள் நீதி மய்யத்தில் இருந்து கமீலா நாசர் ஒதுங்கியதற்கு இதான் காரணமா…! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேற்குவங்கத்தில் 6 ஆம் கட்ட தேர்தல் : சூடுபிடித்த வாக்குப்பதிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்