ரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி தொடர்ந்த வழக்கில் முதலமைச்சர் பழனிசாமிக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை தி.மு.க. நிர்வாகியான சூலூர் ஏ. ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் சென்றார். அப்போது இரவில் சிறுநீர் கழிப்பதற்காக, மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, அந்த பெண் ரயில்வே போலீசில் வாய்மொழி புகார் அளித்தநிலையில், "நான் வேண்டுமென்றே பண்ணவில்லை, நீரழிவு பிரச்சினை இருப்பதால் அவசரமாக இறங்கியதாக" சூலூர் ராஜேந்திரன் அந்த பெண்ணிடம் விளக்கம் அளித்தார். இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அந்த பெண் தெரிவித்த நிலையில், 15 நாட்களுக்கு பின் சூலூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, ரயில் பயணத்தின் போது பெண் பயணி ஒருவருக்கு திமுக நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்ததாக சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்தார்.

அதனைத் தொடர்ந்து தன்னைப்பற்றி அவதூறாக பேசுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு எதிராக சூலூர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரில் பதிவான வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், அவதூறாக சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மட்டும் நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திரன் வழக்கு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

You'r reading ரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி தொடர்ந்த வழக்கில் முதலமைச்சர் பழனிசாமிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - IPL தொடர்: 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்