மத்திய அரசு தோற்றுவிட்டது – நிர்மலா சீதாராமனின் கணவர் குற்றச்சாட்டு!

பிரபல பொருளாதார நிபுணரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர், மத்திய அரசு மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் விமர்சித்திருக்கிறார்.

பிரபாகரின் மனைவி நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சரவையில் மிக முக்கியப் பதவியில் உள்ள போதிலும், பிரபாகர் தனது நிலைப்பாட்டில் உறுதி காட்டி வந்திருக்கிறார். அவ்வப்போது, மத்திய அரசின் செயல்பாடுகளைப் பகுப்பாய்வு செய்து விமர்சனங்களை முன்வைத்து வரும் பிரபாகர், கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மத்திய அரசின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதாக வீடியோ ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அந்த வீடியோவில் பிரபாகர், `` கொரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவைத் திணறடித்துக் கொண்டிருக்கிறது. உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது. ஒட்டுமொத்த தேசமும் பெரும் மருத்துவ நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்பதனை மறந்து, அரசு தனது பொறுப்புகளைத் துறந்து பொறுப்பற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

கடந்த ஒரு வருட காலத்தில் ஏராளமான உயிரிழப்புகள். நானும் என் நண்பர்கள் பலரை இழந்திருக்கிறேன். தகப்பனாக, தாயாக, மகனாக, மகளாக மருத்துவமனை சென்றவர்கள் ஒருபிடி சாம்பலாக வீடு திரும்பினர். நிறைய குடும்பங்கள் வருமானத்தை இழந்து நிற்கின்றன. வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டன. பலர் வாழ்வாதாரத்தை இழந்து வருமானமின்றி இன்றளவும் நிர்கதியாக நின்று கொண்டிருக்கின்றனர். அரசின் எந்த உதவிகளும் இன்று வரையிலும் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையவில்லை.

மருத்துவமனையின் வாயில்களில் நீளும் வரிசைகள், மக்களின் மரண ஓலங்கள், எரியும் பிரேதக்குவியல்கள் எனக் காட்சிகள் பதை பதைக்க வைக்கின்றன. ஆனால், அரசியல் தலைவர்களுக்கும், மத தலைவர்களுக்கும் இதைப்பற்றி கொஞ்சமும் அக்கறையில்லை. அரசியல் தலைவர்களுக்குத் தேர்தலும், மதத்தலைவர்களுக்கு தங்கள் மத கிரீடமும் இறங்கிவிடக்கூடாதென்ற கவலையைத் தவிர வேறெதிலும் கவனமில்லை.

பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என விழிப்புணர்வூட்ட வேண்டிய அனைவரும், லட்சங்களில் மக்களைக்கூட்டித் தேர்தல் மாநாடு நடத்த, மற்றொருபுறம் கும்பமேளாவில் லட்சக்கணக்கானவர்கள் கூடிக்களித்தனர்.

கொரோனாவின் கோரத்தாண்டவம் தேசம் முழுவதும் பரவியிருக்க, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் ஒன்றையும் பின்பற்றாமல் மேற்கு வங்க தேர்தலுக்கு ஆள் சேர்த்தது பாஜக என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

மத்திய அமைச்சரின் கணவர் அரசை சாடிய பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading மத்திய அரசு தோற்றுவிட்டது – நிர்மலா சீதாராமனின் கணவர் குற்றச்சாட்டு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மே1, மே2 தேதிகளில் ஊரடங்கா? – நீதிமன்றத்தில் தமிழக அரசு சொன்னது என்ன?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்