ராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா?

கே.பி.முனுசாமி எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றிருந்தும் அவருக்கு ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்..

கடந்த மாதம் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டவர் கே.பி.முனுசாமி. இதைத்தொடர்ந்து கடந்த 2-ந் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் கட்சியில் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

கடந்த 2011ம் ஆண்டு கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளாட்சித்துறை அமைச்சரான கே.பி.முனுசாமி, 2014ம் ஆண்டு மே மாதம் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2016 தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் முதலில் வேட்பாளராக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டார். பிறகு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தோல்வி அடைந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் வெற்றி பெற்றார். அதன் பின்னர் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டு உறுப்பினர் ஆனார். இந்த நிலையில் தான் 2021 சட்டசபை தேர்தலில் வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

எப்படியும் அ.தி.மு.க ஆட்சி அமையும். அதன் பிறகு, தான் அமைச்சர் ஆகி விடலாம். பிறகு எம்.பி. பதவியை துறந்து விடலாம் என கே.பி.முனுசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால் தற்போது தி.மு.க ஆட்சி அமைந்திருப்பதால் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் வாய்ப்பே கே.பி.முனுசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால் இவர் எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டு, எம்.எல்.ஏ.வாக பதவியை தொடர்வாரா? அல்லது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு எம்.பி.யாக பதவியை தொடர்வாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.

You'r reading ராஜினாமா முடிவில் கே.பி.முனுசாமி – திமுகவுக்கு லாபமாக அமையுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - “திமுக பதவி ஏற்றதும் அதிரடி நடவடிக்கைதான்” : உதயநிதி ஆவேசம்…!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்