தென்னக யோகி ஆதித்யநாத் பாஜகவில் இணைந்தார்: தெலங்கானா தேர்தல் வெற்றிக்கு உதவுவாரா?

Swami Paripoornananda Joins BJP May Campaign Telangana Elections

தென்னக 'யோகி ஆதித்யநாத்' என்று அழைக்கப்படும் சுவாமி பரிபூரணனந்தா புதுடெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பொதுச்செயலாளர் ராம் மாதவ் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவில் உள்ள ஸ்ரீ பீதம் மடத்தின் தலைவர் சுவாமி பரிபூரணனந்தா. இவருக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இவரை அநேகர் பின்பற்றுகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் தெலுங்கு திரைப்பட நடிகரும் விமர்சகருமான கதி மகேஷ், இந்து தெய்வங்களை குறித்து கூறிய கருத்துகள் இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தியதாக கூறி அவரை கைது செய்ய வேண்டுமென்று சுவாமி பரிபூரணனந்தா கோரிக்கை விடுத்திருந்தார். வன்முறை தூண்டும் கருத்துகளை சுவாமி பரிபூரணனந்தா கூறியதாக, ஹைதராபாத் நகருக்குள் நுழைவதற்கு அவருக்கு ஆறு மாத தடை ஜூலை மாதம் விதிக்கப்பட்டிருந்தது. ஹைதராபாத் உயர்நீதிமன்றம் அந்தத் தடையை ஆகஸ்ட் மாதம் நீக்கியது.

தெலங்கானா சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் வரும் டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2014 சட்டப்பேரவை தேர்தலின்போது பாரதீய ஜனதா, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு ஐந்து இடங்களில் வென்றது. இந்த முறை தெலுங்கு தேசம், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளது.

"தெலுங்கு மக்கள் ஏற்கனவே எனக்கு ஏராளமானவற்றை அளித்திருக்கிறார்கள். நான் ஒரு சேவகராக வருகிறேன். பலனை எதிர்பாராத துறவியாக இரவு பகல் எந்நேரமும் உழைப்பேன்," என்று சுவாமி பரிபூரணனந்தா கூறியுள்ளார்.
"சுவாமி பரிபூரணனந்தா இணைந்தது பாரதீய ஜனதாவுக்கு மகிழ்ச்சியான செய்தி. சமூக சேவை, சமயம் மற்றும் பொது விழிப்புணர்வு ஆகிய சேவைகளை செய்து ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் தென் மாநிலங்கள் அனைத்திலும் அளவற்ற பணிகளை சுவாமி பரிபூரணனந்தா செய்துள்ளார். முன்பு அவரது ஆசி நம்மோடு இருந்தது. இப்போது அவரே நம்முடன் இருக்கும்படி இணைந்துள்ளார்," என்று அமித் ஷா கூறியுள்ளார்.

சுவாமி பரிபூரணனந்தா இணைந்ததால் பாரதீய ஜனதாவுக்கு என்ன லாபம் என்பது டிசம்பர் 11ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது தெரிய வரும்.

You'r reading தென்னக யோகி ஆதித்யநாத் பாஜகவில் இணைந்தார்: தெலங்கானா தேர்தல் வெற்றிக்கு உதவுவாரா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாக்ஸ் ஆபிஸ் கிங்கான வடசென்னை !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்