திருவாரூர் தொகுதிக்கு பிப்.7-க்குள் இடைத்தேர்தல்!

Tiruvarur byelection date released election commission

திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி மாதம் 7-ந் தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் 18 தொகுதிகளும் காலியாக உள்ளது. இந்த 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ வும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி காலமானார். அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 7-ந் தேதியுடன் 6 மாதம் நிறைவடைகிறது. இதே போல அதிமுக எம்எல்ஏ போஸ் மரணத்தால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக உள்ளது.

ஆகையால் திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரசத சாஹூ சார்பில் இன்று மதுரை கிளையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி 7-ந் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

திருப்பரங்குன்றம் தொகுதி குறித்த நீதிமன்ற வழக்கின் முடிவை பொறுத்து அங்கு தேர்தல் நடத்துவது பற்றி முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

திருவாரூர் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கு முடிவுக்கு வந்தால் 2 தொகுதிகளிலும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த தயார் என்றும் தேர்தல் கமிஷன் கூறியிருக்கிறது.

அண்மையில் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன் அடிப்படையில் 20 தொகுதிகளுக்கும் பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகின்றது.

You'r reading திருவாரூர் தொகுதிக்கு பிப்.7-க்குள் இடைத்தேர்தல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிபிசிஐடி போலீசார் வழக்கு தொடர திட்டம்- ஐகோர்ட்டில் பொன். மாணிக்கவேல் பரபர புகார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்