மனைவி மீது ஏற்பட்ட கோபத்தை தீர்க்க கணவன் செய்த காரியம் என்ன தெரியுமா?

மனைவியின் மீது ஏற்பட்ட கோபத்தை தீர்ப்பதற்காக ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி 450 கிலோ மீட்டர் தூரம் நடந்தார். இறுதியில் கொரோனா நிபந்தனைகளை அவர் மீறியதாகக் கூறி போலீசார் அவருக்கு 35 ஆயிரம் அபராதம் விதித்தனர். இத்தாலி நாட்டில் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்படுவது என்பது எல்லா வீடுகளிலும் நடைபெறும் சகஜமான ஒன்றாகும். ஒருவருக்கொருவர் ஆவேசமாக திட்டுவதும், தாக்குவதும் வழக்கமானது தான். எல்லை மீறினால் விவாகரத்து வரை போகும். ஆனால் இத்தாலியில் ஒருவர் தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட கோபத்தை தீர்ப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி 450 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்தது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் கோமோ என்ற பகுதியை சேர்ந்த 48 வயதான நபர் தான் இந்த பரபரப்பை ஏற்படுத்திய நபர் ஆவார். இவருக்கும், இவரது மனைவிக்கும் வழக்கமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது உண்டு. இந்நிலையில் கடந்த வாரம் வழக்கம்போல அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆனால் அன்று ஏற்பட்ட தகராறில் அந்த நபருக்கு மனைவி மீது கடுமையான கோபம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக ஒரு பேக்கை எடுத்துக் கொண்டு அந்த நபர் வீட்டை விட்டு வெளியேறினார். எங்கு போய்விடுவார், வீட்டுக்கு திரும்பி வந்து தானே ஆக வேண்டும் என்று அவரது மனைவி கருதினார். ஆனால் போனவர் போனவர் தான்.... நாட்கள் ஆனதே தவிர அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

இதையடுத்து அவரது மனைவி அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் தன்னுடைய கணவர் வீட்டை விட்டு சென்றது குறித்து புகார் கூறினார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இதற்கிடையே வீட்டை விட்டு வெளியேறிய அந்த நபர் நடந்து நடந்து 450 கிலோ மீட்டர் தாண்டி பானோ என்ற இடத்தை அடைந்தார். அப்பகுதியில் நள்ளிரவு 2 மணியளவில் தன்னந்தனியாக நடந்து சென்று கொண்டிந்திருந்த அந்த நபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது தான் அவர் குறித்த தகவல் தெரியவந்தது. தற்போது கொரோனா காலம் என்பதால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் அவரது மனைவியுடன் தொடர்பு கொண்டு போலீசார் விவரத்தை கூறினர். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டுக்கு சென்றார். அந்த நபருக்கு போலீசார் அபராதம் விதித்தது தவறு என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கோபத்தால் அவரை துன்புறுத்தாமல் அமைதியாக வீட்டை விட்டு வெளியே சென்றது ஒரு குற்றமா என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

You'r reading மனைவி மீது ஏற்பட்ட கோபத்தை தீர்க்க கணவன் செய்த காரியம் என்ன தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சூப்பர் நடிகரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை ஓட்டு போட முடியாமல் ஏமாற்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்