தமிழகத்தில் பறவை காய்ச்சல் வராதாம் : சங்க தலைவர் சொல்கிறார்

தமிழக கோழிப் பண்ணைகளில் தீவிர உயிர் பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்பட்டு வருவதால் பறவை காய்ச்சல் பரவ வாய்ப்பே இல்லை என கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜல்வாரே, பாரன் , கோட்டா ஆகிய பகுதிகளிலும் , கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தொற்று பரவாமல் தடுக்க ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பண்ணைகளில் உள்ள சுமார் 36 ஆயிரம் வாத்துக்களை அழிக்க கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அப்பகுதி தனி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாத்து குஞ்சுகள், தீவனங்கள் அங்கிருந்து வெளியே எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லைப் பகுதியில் 26 இடங்களில் கேரள மாநில அரசு சோதனை சாவடி களை அமைத்துள்ளது.நோய் தடுப்பு மருந்துகள் தெளித்த பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல்லில் இன்று கோழிப்பண்ணை உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின் சங்கத்தின் தலைவர் சிங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரளாவில் வாத்துகள் நீர்நிலைகளில் வளர்ப்பதால் தடுப்பூசி போட வாய்ப்பு இல்லை. அதனால்தான் அங்கு பறவை காய்ச்சல் பரவி உள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை கோழிப்பண்ணைகளில் தீவிர உயிர் பாதுகாப்பு முறை ( Bio security system) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் கோழி பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே இங்கு பறவை காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகளே இல்லை . மேலும் கோழிகளுக்கு முறையாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பண்ணைகளில் வரும் தொழிலாளர்கள் மற்றும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலிருந்து தினந்தோறும் கேரள மாநிலத்திற்கு சுமார் ஒரு கோடி முட்டைகள் அனுப்பப்பட்டு வருகிறது அவைகள் தற்போதும் வழக்கம்போல அனுப்பபட்டு வருகிறது என்றார்.

You'r reading தமிழகத்தில் பறவை காய்ச்சல் வராதாம் : சங்க தலைவர் சொல்கிறார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் இங்கிலாந்து பிரதமரின் இந்தியா வருகையில் மாற்றமில்லை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்