இப்படியே புறக்கணிப்பதா? ஸ்டாலின் மீது திருநாவுக்கரசர் காட்டம் -Exclusive

Thirunavukkarasar upsets over MK Stalin

திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கடும் கோபத்தில் இருப்பதாக கூறுகின்றன சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள்.

திருநாவுக்கரசர் பதவிக்கு வந்த காலம் முதலே திமுகவுடன் மல்லுக்கட்டிக் கொண்டுதான் இருந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது பகிரங்கமாகவே இந்த மோதல் போக்கை திருநாவுக்கரசர் வெளிப்படுத்தினார்.

ஒருபக்கம் சிகலா, தினகரன் ஆகியோருடன் நெருக்கம் காட்டுவது; இன்னொரு பக்கம் நடிகர் ரஜினிகாந்துடன் தொடர்பில் இருப்பது என திருநாவுக்கரசர் தன் பாணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அண்மையில் காங்கிரஸுடன் அமமுக கூட்டணி வைக்கும் என்கிற பேச்சுகள் எழுந்த பின்னணியிலும் திருநாவுக்கரசரே இருப்பதாக திமுக திடமாக நம்புகிறது.

இதனால்தான் தமிழக காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் திமுக அவ்வளமாக ஆர்வம் காட்டுவதில்லை. இதன்வெளிப்பாடாகத்தான் கராத்தே தியாகராஜன் வெளிப்படையாகவே திமுக மீது கோபத்தைக் காட்டினார்.

இந்நிலையில் காங்கிரஸை உள்ளடக்கிய மெகா கூட்டணி குறித்து சென்னையில் ஸ்டாலினை சந்தித்து பேசினார் சந்திரபாபு நாயுடு. கூட்டணி விவகாரம்தானே.. நாமும் அங்கே இருந்தால் லைம் லைட்டில் இருப்போமே என கருதிய திருநாவுக்கரசர் திமுகவுக்கு தூதுவிட்டுப் பார்த்தார்.

ஆனால் திமுக தரப்பில் இருந்து க்ரீன் சிக்னல் வரவே இல்லையாம். இதனால் கடும் விரக்தியடைந்தாராம் திருநாவுக்கரசர். சந்திரபாபு நாயுடு சந்திப்பு நடைபெற்ற பொழுது சென்னையில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களில் ஒருவரான சஞ்சய் தத் முகாமிட்டிருந்தார்.

ஸ்டாலினை சந்திக்க சஞ்சய் தத் நேரம் கேட்டிருக்கிறார். ஸ்டாலின் தரப்பும் காலையில் சந்திக்கலாம் என தெரிவித்திருக்கிறது. அப்போது உஷாராக, யார் யார் உங்களுடன் வருகிறார்கள்? என்று ஸ்டாலின் தரப்பு, சஞ்சய் தத்திடம் கேட்டிருக்கிறது. இதற்கு நானும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும் வருகிறோம் என கூறியிருக்கிறார் சஞ்சய் தத்.

ஆனால் ஸ்டாலின் தரப்போ நீங்களும் உங்களுடன் டெல்லியில் இருந்து வந்திருப்பவர்களும் வந்தாலே போதும் என கறாராக சொல்லிவிட்டதாம். அதனால்தான் இன்றைய ஸ்டாலினுடனான சஞ்சய்தத் சந்திப்பில் திருநாவுக்கரசர் இடம்பெறவில்லையாம்.

மீண்டும் தம்மை ஸ்டாலின் தரப்பு நிராகரித்திருப்பது திருநாவுக்கரசை கொந்தளிக்க வைத்திருக்கிறது. இப்படியே தொடர்ந்து என்னை புறக்கணித்தால் ‘எனக்கும் அரசியல்’ தெரியும் என்பதை காட்டித்தான் ஆக வேண்டும் என குமுறியிருக்கிறாராம் திருநாவுக்கரசர்.

இது தொடர்பாக திமுக வட்டாரத்தில் நாம் விசாரித்த போது, எல்லோரிடமும் தொடர்பில் இருக்கிறார் திருநாவுக்கரசர். சில ரகசிய பேச்சுவார்த்தைகளில் அவரை வைத்துக் கொள்வது அவ்வளவு சரியாக வராது. வெளியே கசியவிட்டுவிடுவார் என்கிற காரணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என அடித்துச் சொல்கின்றனர்.

- திலீபன்

 

You'r reading இப்படியே புறக்கணிப்பதா? ஸ்டாலின் மீது திருநாவுக்கரசர் காட்டம் -Exclusive Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நிதி மோசடி- கர்நாடகா மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ‘சரண்’

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்