கிரிக்கெட் விதிகளில் அதிரடி திருத்தம் சப்ஸ்டிட்யூட் வீரர்களும் பேட்டிங், பந்து வீச அனுமதி

In cricket Substitute players permitted to batting and bowling when players injured, ICC announced:

இதுவரை கிரிக்கெட் போட்டியில் மாற்று (சப்ஸ்டிட்யூட்) வீரராக களம் இறங்குபவர்கள் பீல்டிங் மட்டுமே செய்ய அனுமதிக்கப்பட்டனர். இனிமேல், போட்டியின் போது, பேட்ஸ்மேனோ, பவுலரோ காயமடைந்தாலும் அவருக்குப் பதிலாக களமிறங்கும் சப்ஸ்டிட்யூட் வீரர் பேட்டிங் செய்யவும், பந்துவீசவும் அனுமதிக்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளில் சமீப காலமாக வீரர்கள் காயமடைந்து போட்டியின் போது பாதியில் வெளியேறுவது அதிகரித்துள்ளது. இதுவரை கிரிக்கெட் போட்டிகளில் பீல்டிங் செய்யும் வீரருக்கு மாற்றாக வேறு வீரர் அனுமதிக்கப்படுவது மட்டுமே வழக்கமாக இருந்தது. இந்த மாற்று வீரர் பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் பேட்டிங், பந்து வீச்சிலும் வீரர்கள் காயமடைந்தால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்தது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்மதுல்லா ஷாகிதியை பவுன்சர் பந்து தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.
டாக்டர்களின் அறிவுரையைக் கேட்காமல் தொடர்ந்து பேட் செய்தார். மாற்று வீரர்களுக்கு பேட்டிங் வாய்ப்பு இல்லாததால் இதுபோன்ற நெருக்கடிக்கு வீரர்கள் தள்ளப்படுகின்றனர். இதனால், உடனடியாக புதிய விதியை அமல்படுத்த வேண்டுமென்று, கிரிக்கெட் விளையாடும் நாடுகள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் இந்த விதிமுறையை பரீட்சார்த்த முயற்சியாக ஐசிசி சோதித்து பார்த்தது.ஆஸ்திரேலியாவின் உள்ளுர் தொடர்களிலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் தொடர்களிலும் சோதனை முயற்சியாக மாற்று ஆட்டக்காரர்கள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து லண்டனில் தற்போது நடந்து வரும் ஐசிசி ஆண்டு இறுதி குழு கூட்டத்தில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விதிகளில் மாற்றம் செய்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி வரும் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரில் இந்த விதிமுறை நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கும், மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்த மாற்றம் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

You'r reading கிரிக்கெட் விதிகளில் அதிரடி திருத்தம் சப்ஸ்டிட்யூட் வீரர்களும் பேட்டிங், பந்து வீச அனுமதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈசியா செய்யலாம் வெண்ணிலா கப் கேக் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்