ஜடேஜாவுக்கு பதில் சாஹலை அணியில் சேர்த்ததில் தவறில்லை வீரேந்திர சேவாக் கருத்து

பேட்டிங் செய்யும் போது காயமடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை களமிறக்கியதில் எந்த தவறும் இல்லை என்று இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். இந்த வாய்ப்பை முதலில் பயன்படுத்தியது ஆஸ்திரேலியா தான் என்றும் அவர் கூறியுள்ளார்.கான்பராவில் நேற்று நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இந்த போட்டியில் ஒரு அதிசய சம்பவம் நடந்தது. போட்டி தொடங்குவதற்குச் சற்று முன் இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

11 வீரர்களில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் இடம்பெறவில்லை. சாஹல் மற்றும் குல்தீப் யாதவுக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆனால் போட்டியின் போது காயமடைந்த ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக களமிறங்கிய யுஸ்வேந்திர சாஹல் தான் நேற்றைய போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் ஆக தேர்வு செய்யப்பட்டார் என்பது யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயமாகும்.

டாசில் தோல்வியடைந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியாவின் ஆட்டத்தைப் பார்த்தபோது நிச்சயம் போட்டியில் இந்தியா வெற்றி பெறாது என்றே கருதப்பட்டது. பேட்டிங் பிட்சில் 20 ஓவரில் இந்தியா 161 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல் அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்தபடியாக ரவீந்திர ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜடேஜாவுக்கு பதில் களமிறங்கிய சாஹல் 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆஸ்திரேலியாவின் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். சமீபத்தில் தான் ஐசிசி கன்கஷன் சப்ஸ்டிடியூட் என்ற முறையைக் கொண்டு வந்தது.

இதன்படி பேட்டிங் செய்யும்போது பேட்ஸ்மேனுக்கு பந்துவீச்சாளரால் காயம் ஏற்பட்டு அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் அவருக்குப் பதிலாக புதிய ஒரு வீரரைக் களமிறக்கி விளையாட வைக்கலாம். இப்படிக் களமிறங்கிய சாஹல் தான் நேற்று கடைசியில் மேன் ஆப் தி மேட்ச் ஆக மாறினார். இதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜடேஜாவுக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்டிருந்தது என்றும், எனவே காயத்துடன் அவரை விளையாட அனுமதித்தது தவறு என்றும் ஆஸ்திரேலியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறுகையில், இந்த புதிய முறையை முதலில் ஆஸ்திரேலியா தான் பயன்படுத்தியது. ஒரு போட்டியின் போது காயமடைந்த ஸ்மித்துக்கு பதிலாக லபுஷைன் களமிறங்கினார். அந்தப் போட்டியில் அவரும் சிறப்பாக விளையாடினார். எனவே இதில் எந்த தவறும் இல்லை. நான் விளையாடும் போது எனக்குப் பல முறை தலையில் அடிபட்டது. அப்போதெல்லாம் இந்த முறை அமலுக்கு வரவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

You'r reading ஜடேஜாவுக்கு பதில் சாஹலை அணியில் சேர்த்ததில் தவறில்லை வீரேந்திர சேவாக் கருத்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விளை நிலங்களுக்கு மத்தியில் எண்ணெய் குழாய்கள்: விவசாயிகள் போராட்டம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்