மும்பை திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமை

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து மும்பை திரும்பிய 4 இந்திய வீரர்கள் உள்பட 5 பேர் தங்களது வீடுகளில் 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்று மும்பை நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் நடத்தப்பட்டது.ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் தலா 3 டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி சென்றது. ஒருநாள் போட்டித் தொடரை ஆஸ்திரேலியாவும், டி20 மற்றும் டெஸ்ட் போட்டித் தொடரை இந்தியாவும் வெற்றி பெற்றது.

இதில் டெஸ்ட் தொடரில் இந்தியா பெற்ற வெற்றி ஒரு சரித்திர சாதனையாக கருதப்படுகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா இரண்டாவது இன்னிங்சில் 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மிக மோசமாக தோல்வி அடைந்தது. டெஸ்ட் போட்டியில் இது தான் இந்தியாவின் மிக குறைந்த ரன்கள் ஆகும்.

முதல் போட்டியிலேயே இந்திய அணி படுதோல்வி அடைந்ததால் அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைவது உறுதி என்றே அனைவரும் கருதினர். ஆனால் கோஹ்லி ஊருக்குத் திரும்பிய பின்னர் அடுத்த 3 போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பை ஏற்ற அஜிங்கியா ரகானே அணியை யாருமே எதிர்பாராத வகையில் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.மெல்பர்னில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை பழிதீர்த்தது. சிட்னியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியை ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் மற்றும் ரிஷப் பந்தின் அபார ஆட்டத்தால் தோல்வியின் விளிம்பில் இருந்து இந்தியா டிரா செய்தது. கடைசியில் பிரிஸ்பேன் மைதானத்தில் இந்தியா பெற்ற வெற்றியை சமீப காலத்தில் யாராலும் மறக்க முடியாது. கடந்த 32 வருடங்களாக இந்த மைதானத்தில் தோல்வியே அறியாமல் விளையாடிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்தது ஒரு சரித்திர சாதனையாக கருதப்படுகிறது.

இதையடுத்து இந்தியா 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது. இந்நிலையில் இன்று இந்திய வீரர்கள் 4 பேர் உள்பட 5 பேர் ஆஸ்திரேலியாவில் இருந்து துபாய் வழியாக மும்பை வந்தனர். கேப்டன் ரகானே, ரோகித் சர்மா, ஷார்துல் தாக்கூர், பிரித்வி ஷா மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இன்று மும்பை வந்தனர். இவர்களுக்கு விமான நிலையத்தில் கோரானா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் 7 நாட்கள் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்று மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாகல் தெரிவித்துள்ளார். இதையடுத்து இவர்கள் 5 பேரும் 7 நாட்கள் தங்களது வீடுகளில் இருப்பார்கள்.

You'r reading மும்பை திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தயாரிப்பாளர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் லாரன்ஸ்.. ஜோடி நடிகை யார் தெரியுமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்